Saturday, 13 August 2016

சங்க ஏடு - சுரசுரப்பான கைகள்

ஒருநாள் பொழுதில் கபிலரும் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனும் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்பொழுது மன்னன் கபிலரின் கையைப் பற்றிக்கொண்டு “புலவரே உமது கை மிகவும் மென்மையாக உள்ளதே” என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதுகேட்ட கபிலருக்குச் சொல்லவா வேண்டும் உதித்துவிட்டது பாடல்.  
புதுக்கவிதை வடிவம்
கணைய மரங்களின்
காலுறிக்கும் வலிமை
முதல் வேலையே
எதிர்ப்போரை உதிர்த்தல்தான்
இப்படிக் கடுங்கோபம் கொண்ட
சிறுகண்ணுடைய யானையை
வேலைப்பாடு பொருந்திய
அங்குசம் கொண்டு
அதன் அருகில் சென்று

மதத்தை அடக்கி வீரத்தைக்
காட்டி நிற்கின்ற கைகள் அது..
பாதாளக் கிணற்றைக்
கவனமாய்க் கடப்பதற்கு
குதிரையின் பிடிவாரை
சுண்டி இழுக்கின்ற கைகள் அது..
நயமிக்க தேரில்
நின்றுகொண்டு எதிரிகளை
அன்பால் முடியாது என்று
அம்பால் வீழ்த்த
வில்லினை இழுத்து விடுகின்ற கைகள் அது..
இத்தனை வேலைகளைச் செய்யும்
உன் கைகள்
பஞ்சுபோல் இருக்க வாய்ப்பில்லை
அதுதான் இறுகிப்போய் உள்ளன..
நாங்கள் அவ்வாறில்லை..
காய்களையும் கறிகளையும் உண்டு
உடல் வருத்தி
வேலை செய்யும் பழக்கமில்லை
உன்னைப் பாடுவதைத் தவிர
வேறு ஒன்றும் அறியோம்..
ஆதலால்தான் எங்கள் கைகள்
மெலிந்தனவாய் உள்ளன..
செய்யுள்
கடுங்கண்ண கொல்களிற்றால்
காப்புடைய எழுமுருக்கிப்
பொன்னியல் புனைதோட்டியான்
முன்பு துரந்து சமம் தாங்கவும்
பாருடைத்த குண்டகழி
நீரழுவ நிவப்புக் குறித்து
நிமிர் பரிய மா தாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்
வலிய வாகுநின் தாள் தோய் தடக்கை
புலவு நாற்றத்து பைந்தடி
பூ நாற்றத்த புகைகொளீஇ ஊன் துவை
கறி சோறுண்டு வருந்து தொழிலல்லது
பிறிது தொழில் அறியா ஆகலின் அன்றும்
கார் அணங்காகிய மார்பில் பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மைச்
செருமிகு சேஎய் நின் பாடுநர் கையே (புறம் .14)
                          திணை – பாடாண் திணை
                          துறை – இயன்மொழித்துறை
உரைவடிவம்
காவலுக்கான கணைய மரத்தை முறித்து கொலைத்தொழிலை விரும்பிச் செய்யும் வலிமை பொருந்திய யானையை அழகுடைய இரும்பால் செய்யப்பட்ட அங்குசம் கொண்டு அடக்குபவன் நீ. பிளந்து கிடந்த கிடங்கு ஒன்றில் ஆழமான நிலையில் நீர் நிரம்பிக் கிடக்க அதனுள் செல்லாமல் தாண்டிக் கடத்தற் பொருட்டு குதிரையின் கயிற்றை இழுத்துப் பிடிக்கும் கைகள் உன் கைகள் அம்பறாத்தூணி பொருந்திய தேரினுள் வடு பொருந்தும்படி வில்லினை ஏவுதற்குரிய வலிய கைகள் பரிசு பெறுபவர்களுக்கு ஆபரணங்களை வாரி வழங்குதற்குரிய கைகள் ஆதலால் நின் கைகள் வலியனவாக உள்ளன. புலால் நாற்றமுடைய புதிய ஊனைச் சமைத்து உண்ணுதலையும் உடலினை வருத்தி வேறு தொழில் ஏதும் செய்யாததாலும் பாடுதல் தொழிலையுடைய எமது கைகள் மென்மையாக உள்ளன.
அருஞ்சொற்பொருள்

எழு – கணைய மரம், சமம் – வேண்டும் அளவு, குசை – சாட்டி, பிடிவார், புறம் – முதுகு, சாபம் – வில், செவ்விததடி-புதிய ஊன் கறி

3 comments:

  1. nice

    thangaraj
    vtjana07@gmail.com
    www.dataentryjobathome.com

    ReplyDelete