வியாழன், 3 மார்ச், 2016

தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்

Ulagasivan Sivan  /  at  மார்ச் 03, 2016  /  No comments

   தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் 
செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்

             - முனைவர் ம.லோகேஸ்வரன்

      கொங்குதேர் வாழ்க்கையுடைய அஞ்சிறைத்தும்பியைக் காமம் செப்பாமல் கண்டதைச் சொன்னதிலிருந்து தமிழாய்வு தொடங்கிவிட்டது என்பர். அதற்கு முந்தைய காலக்கட்டங்களிலும் ஒரு தமிழ்ப்படைப்பு வெளியிடப்பெற்றுச் சான்றோர் பலரின் முன்னிலையில் விவாதங்களுக்கு உட்பட்டு கருத்தறிந்து மேற்கொள்ளப்பெற்றுள்ளது. இதற்குத் தொல்காப்பியம் முதலான பண்டை இலக்கியங்கள் தக்கச் சான்றுகளாகும். சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம், உரைச்சிறப்புப் பாயிரம் என்ற வகைப்பாடுகளெல்லாம் பனுவல் மீதான  ◌ாவசிப்பு மரபினை வெளிப்படுத்துகின்றன. வகை தொகைப்படுத்துதல், துறைக்குறிப்பு, கூற்றுக்குறிப்பு, உரையாக்கம் என்கிற வகைப்பாடுகளும் வாசிப்புப் பின்னணியில் நேர்ந்தவைகளேயாகும். ஆகவே ஒரு பனுவலை வாசித்தல் என்கிற பாரம்பரிய முறைமை ககாலத்திற்கேற்ப பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. அஃது இன்றளவில் வாசிப்பு, ஆய்வு என்கிற இருநிலைகளில் வெவ்வேறு பொருள்பட நிற்கின்றது. ஆனால் வாசிப்பும் ஆய்வும் வெவ்வேறு சொற்களில் புலப்படுகின்ற ஒரு கோட்டு வழக்குகள் என்பதைப் பண்டைய கால ஏடு பெயர்ப்புக் கல்வி உணர்த்துவதை அறியலாம்.
1920 ஆம் ஆண்டுகள் வாக்கில் சங்க இலக்கியங்கள் முற்றிலுமாக அச்சாக்கம் பெற்றுவிட்டன. அச்சாக்கம் பெற்ற காலக்கட்டங்களிலிருந்து அதாவது 19 ஆமு; நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தான் முழு வீச்சுடனான ஆய்வுப் போக்கினைத் தமிழ்ச் சூழலில் காணமுடிகிறது.
பழந்தமிழ் இலக்கியங்கள் அச்சுவாகனம் ஏறியபின் சங்க இலக்கியங்கள் எல்லோருடைய கையிலும் கிடைக்கப்பெற்றன. அது தொடர்பான நூல்கள், கட்டுரைகள், ஆய்வுகள் வெளிவந்தன. தமிழ் ஆராய்ச்சி என்பது 1856 இல் ராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஒப்பிலக்கண ஆய்வைத் தொடங்கி வைத்த பின் மனோன்மணியம் பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை, எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை, வெ.கனகசபைபிள்ளை, சீனிவாச அய்யங்கார்,எஸ்.கிருஷ்ணசாமி அய்யர் போன்றோரின் ஆய்வுகள் ஆங்கிலத்தில் நிகழ்ந்தன. மறைமலையடிகள், மு.ராகவையங்கார், ரா.ராகவையங்கார் போன்றோரின் ஆய்வுகள் தமிழில் நிகழ்ந்தன. (ச.அகத்தியலிங்கம், சங்க இலக்கிய ஆய்வுகள் செய்தனவும் செய்ய வேண்டுவனவும்.)
       1887ஆம் ஆண்டு சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையைச் சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்பித்து வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த சங்க இலக்கியமாகப் பதிப்பியறிஞர்களால் கூறப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னதாக வெளிவந்த திருமுருகாற்றுப்படையைச் சமயப் பின்னணியூடு இணைத்துக் கணக்கில் கொள்ளாது விட்டுவிடுவர். ஆகவே கலித்தொகையினூடாகச் சங்க இலக்கியப் பரவலாக்கம் தொடர்கிறது எனலாம். ஏனென்றால் கலித்தொகையின் பதிப்புரையைச் சி.வை.தா. அமைத்துக்கொண்ட முறைமை ஆகச்சிறந்த ஆய்வுப்பின்னணி கொண்டது. அதேசமயம் சமகால வரலாற்றியல் சிந்தனையுடையது என்பதும் மனங்கொள்ளத்தக்கது. தமிழ் இலக்கியத்தினை வாசிப்பு என்கிற தன்மையிலிருந்து ஆய்வு என்கிற வேறொரு தளத்திற்கு இட்டுச்சென்ற பெருமை சி.வை.தா., உ.வே.சா. போன்ற பதிப்பாசிரியர்களுக்குரியது. இதன்பின்னர் தான் சிற்றிதழ்கள் எனும் ஊடகம் இலக்கியத்தினை மக்களுக்கு எடுத்துச் செல்கின்ற தார்மீகப் பொறுப்பினைப் பெற்றது. அச்சாக்கம் என்பதன் வலிமையை இதனூடாகப் புரிந்து கொள்ளலாம்.     
 தமிழாய்வுச் சூழல்
      பன்னிரண்டாம் வகுப்பை நிறைவு செய்கிற மாணவர்கள் இளங்கலைத் தமிழ்த் துறையைத் தெரிவு செய்வது என்பது வேறு எந்தத் துறையும் கிடைக்கப் பெறாமல் ‘வேறு வழியில்லை’ என்கிற நிலையில்தான் பயிலத் துவங்குகிறார்கள்.  இன்னும் வெளிப்படையாகக் கூறப்போனால்  வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்ற சூழலே அதிகம். அவ்வாறு தமிழைத் தெரிவு செய்கிற மாணவர்கள் பெரும்பான்மையாக மதிப்பெண் அளவில் மிகப் பிந்தியவர்களாகவே உள்ளனர். (விதிவிலக்கு ஒன்றிரண்டு மாணவர்கள்). இந்தச் சிக்கல் அனைத்துத் துறைகளிலும் ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.  ஆர்வ மேலீட்டின் காரணமாகவும் வாசிப்பு மிகுதியின் காரணமாகவும் குறிப்பிட்ட துறையில் தொடர்ந்து இயங்குகின்ற நிலை இருந்தாலும்  அடிப்படை பிரச்சனை என்பது விருப்பமுள்ள துறையின்பால் நேருகின்ற சிந்தனாத்திறன் தான் மையம் பெறுகிறது. இங்கிருந்துதான்  இன்றைய தமிழ் ஆய்வு சார்ந்த பிரச்சனைகளை அல்லது அதற்கான புள்ளியைத் துவங்க நேரிடுகிறது.
    மாணவர் சார்ந்த நிலைப்பாடு இதுவென்றால் ஆசிரியர் சார்ந்த நிலைப்பாடும் குறிப்பிடும்படியாக இல்லை. இதுகுறித்து, “கல்லூரிகள் பலவற்றிலும் தற்போது தொல்காப்பியத்தைப் போதிக்கக்கூடிய ஆசிரியர்கள் இல்லை என்பது மட்டுமின்றி இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் தொல்காப்பியத்தைப் பாடத்திட்டத்தில் சேர்க்கவே முடியாமல் போய்விடும்” (காண்க:மணற்கேணி, இதழ்: 11,ப - 48)  பாடம் கற்பித்தலில் இருந்து பாடத்திட்டம் தெரிவு செய்வதிலிருந்து ஆசிரியர்களின் நிலைப்பாடு குறிப்பிடும்படியாக இல்லை எனலாம். வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்தேறியுள்ள கற்றல் கற்பித்தல் முறைகளை நோக்கின் தமிழ் இலக்கிய வாசிப்புப் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை உணர முடியம். குறிப்பாக செவ்விலக்கிய வாசிப்பின் நிலைப்பாடு இன்னும் வேறொரு தளத்தை நோக்கிச் செல்ல வேண்டும் எனும் கருத்து கொண்டு இ.அண்ணாமலை குறிப்பிடுகின்ற செய்தி மிக முக்கியமானதாகும். 
தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் காலனிய காலத்தில் இன உணர்வு முக்கிய இடம் பெற்றது. சுதந்திரத்திற்குப் பின் இது வலுப்பெற்றது. பாடத்திட்டம் மதச்சார்பற்றது ஆயிற்று என்று சொல்லலாம். சமயம் கடந்து தமிழ் இன உணர்வு தமிழ் தேசிய உணர்வாக வளர்ந்து பாடத்திட்டத்தில் இலக்கியத்தின் தேர்வு வேறுவகையாக  அமைந்தது. தமிழின் பனுவல் சமூகம் தன்னை இனம்காணும் இலக்கிய நூல்களும் வேறாயின. சங்கப் பாடல்களும் சிலப்பதிகாரமும், திருக்குறளும் இனம்காணலில் முக்கிய இலக்கிய நூல்கள் ஆயின. இந்த நூல்களின் பொருள் காண்பதில் தமிழின் தனி நிலையையும் தனித்தன்மையையும் காண்பது பிரதான இடம்  பெற்றது. இது செவ்விலக்கியப் பயிற்சி தமிழ் இலக்கியத்தின் பெருமையைக் காண்பதாகச் சுருங்கியது. (மணற்கேணி, இதழ்: 11,ப - 58)   
தமிழ்ப் படிப்பு வேறு தமிழியல் ஆய்வு வேறு. தமிழ்ப் படிப்பையே  செவ்விலக்கியப் படிப்பாகக் கட்டமைக்கக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டி தமிழ்ப்படிப்பு எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதை விரிவாக விளக்கிச் செல்கிறார் வீ.அரசு. (மணற்கேணி, இதழ்: 13,ப - 44). முனைவர் பட்ட ஆய்வுகள் குறித்துப் பெ.மாதையனின் கருத்தும் ஈண்டு பொருத்திப் பார்க்கத்தக்கது.
ஆய்வுத் தலைப்பைத் தெரிவு செய்து ஆய்வைத் தொடங்கும் இளம் ஆய்வாளர்களிடம் தலைப்பைக் கேட்கையில் அவர்கள் சொல்லும் தலைப்புகள் முன் ஆய்வுகள் எவற்றையும் பார்க்காத நிலையில் தெரிவு செய்துகொள்ளப்பட்ட தலைப்புகளாகவே உள்ளன. சங்க இலக்கியத்தில் இயற்கைப் பின்புலம், சங்க இலக்கியத்தில் தொன்மம், சங்க இலக்கியத்தில் ஐவகை நிலம்சார் வாழ்வியல், சங்க இலக்கியத்தில் திணை வாழ்வியல், சங்க இலக்கியத்தில் மருத வாழ்வியல் என்பன போன்ற தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அந்தந்த நெறியாளரைச் சார்ந்ததே. அவரும் முன்னாய்வுகள் பற்றிய அறிவுடையவராக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இதுபற்றிய அக்கறை ஒருவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. இது ஏற்கனவே செய்யப்பட்டுவிட்ட ஆய்வுத் தலைப்பு என்பதை மற்றவர் கூறினால் அதை உடன்பட்டு ஏற்றுக்கொள்ளும் மனநிலை நெறியாளர்களுக்கும் இல்லை. அவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் இல்லை.இதனாலும் தமிழாய்வு தன் மரியாதையையும் தரத்தையும் இழந்து நிற்கின்றது  (மணற்கேணி, இதழ்: 13,ப-32).
ஆகவே தமிழ் ஆய்வு செழுமை பெறுவதற்குத் துவக்க நிலையான இளங்கலைத் தமிழ் படிப்பதிலிருந்து பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய முக்கியத்துவத்தை மேற்கண்ட அறிஞர்களின் கருத்துகள் அறிவுறுத்துகின்றன.
இதழ்கள்
 தமிழாய்விற்கு இதழ்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இதழ்கள் என்பதற்குக் கறாரான வரையறை ஏதும் குறிக்கப்பெறவில்லை. அன்றாடச் செய்திகள், பலதரப்பட்ட நிகழ்வுகள் எனப் பலவற்றையும் தாங்கி வெளிவருவது இதழ் எனப் பொதுவாகப் பொருள் கொள்ளலாம். ஆனால் சிற்றிதழ்கள் எவ்வாறு இதழ்களிலிருந்து வேறுபடுகின்றன என்பதைப் பொறுத்துச் சில விடயங்களை இதழுக்கான வரையறையாக அனுமானித்துக் கொள்ளலாம். இது குறித்து உரிய இடத்தில் காணலாம். இதழ்கள் எனும் பகுப்பில்  அடையாளப்படுத்தப் பட்டுள்ள சில தமிழிதழ்கள் கீழ்வருமாறு
அற விளக்கு, அறிவுவழி, அஷ்ஷரீ அத்துல் இஸ்லாமியா, இஸ்லாமிய மித்திரன், உங்கள் நூலகம், உண்மையின் முகவரி, உத்தமமித்திரன், உரிமைக்குரல்,கலாவல்லி, குவ்வத், சிந்தனையாளன், சிறுதொண்டன், சுதந்திரம், செந்தமிழ்,சோலைவனம், ஜியா இ முர்து சாவியா, ஞானபாநு, தமிழின ஓசை, திசை எட்டும், திருப்புகழமிர்தம், தீபம், நிகழ், பித்தன், மணல் வீடு, மனஓசை, மானசீகம், மாற்றுக்கருத்து, முல்லைச்சரம், முஸ்லீம் வெள்ளி, மெய்ச்சுடர், வாய்ஸ் ஆப் மெட்ராஸ், வெற்றிநடை (wikipedia.org)
சிற்றிதழ்
           1958 ஈம் ஆண்டு சி.சு.செல்லப்பாவால் வெளியிடப்பட்ட எழுத்து இதழே தமிழ்ச் சிற்றிதழ்களுக்கெல்லாம் முன்னோடி என்பர். சிற்றிதழ்கள் பெரும்பாலும் சமூக அக்கறையுணர்வு கொண்டு எழுந்தவை. சமூக மாற்றம் என்பதையே கருத்தில் கொண்டு தொழிற்பட்ட மாற்று சக்திதான் சிற்றிதழ்கள். ஆனால் எதற்கான மாற்று? யாருக்கான மாற்று? எனும் வினாக்களிலிருந்து சிற்றிதழ்களைப் பிரித்தறிய நேரிடுகிறதுது.
சிற்றிதழ் என்றாலே சிறந்த இதழ் என்றுதான் அர்த்தம். இதைத்தான் தற்போது சீரிதழ் என்றும் சொல்லி வருகின்றார்கள். எதிர்காலத்தில் தமிழ்ச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகச் சொல்லலாம் என்கிறார் வதிலை பிரபா (wikipedia.org).
மேலைநாடுகளைக் காட்டிலும் தமிழ்ப்பரப்பில் சிற்றிதழ்களுக்கான வரவேற்பும் வளர்ச்சியும் மிகமிகக் குறைவுதான். ஆனால் சிற்றிதழ்களுக்கான அத்துனை அம்சங்களையும் உள்ளடக்கியே இதுவரை வெளிவந்திருக்கின்றன. அகப்புறக்கட்டமைப்புகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு சிறந்த படைப்பிதழாகவும் தமிழாய்விதழாகவும் பன்னோக்குப் பார்வையுடைய விமர்சனவிதழாகவும் சிற்றிதழ்கள் வெளிவரத் தொடங்கின.
சிற்றிதழ் என்றால் என்ன? நம் இலக்கியச் சூழலில் இதன் தேவை என்ன? நம் நாட்டில் நாள், வார, மாத ஏடுகளும் எழுத்தாளர் இயக்கங்களும் நீண்ட காலமாக இலக்கியத்தை வளர்க்கும் பணியைத்தானே செய்து வருகின்றன? இதற்குத் தனியாக ஒரு களம் தேவையா? என்று நீங்கள் கேட்கலாம். அதிகார பலமும் பொருளாதார பலமும் இல்லாதவர்களின் வெளிப்பாடாகவும் குரல் நசுக்கப்பட்டவர்கள் தங்கள் குரலை வெளிப்படுத்தும் ஊடகமாகவும் வாசகனைக் கவர்வதற்காக சமசரசம் செய்து கொள்ளாமலும் மாற்றுச் சிந்தனையை முன்வைத்தும் வண்ணங்களுக்கு முக்கியத்துவம் தராமல் குறைவான அச்சுத் தரத்தோடும் வெளிவரும் இதழ்களாகச் சிற்றிதழ்களை அடையாளங் காணலாம். (ந.பச்சைபாலன், சிற்றிதழ் முயற்சிகள் :தீராக் கனவுகள்( patchabala.blogspot.com)
இலக்கியவாதிகளாலும் வரலாற்றறிஞர்களாலும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய சமூகத்தின் ஓர் அங்கம் சிற்றிதழ்கள். சில சிற்றிதழ்களை விக்கிப்பீடியா குறிப்பிட்டுள்ளது அவை கீழ்வருமாறு.
அபிநவ மகயாவதி, இனிய நந்தவனம், இறைஞனாப் புங்கா, இவள் புதியவள், இஸ்லாமிய பிரசார நேசன், இஸ்லாம், உண்மை ஒளி, உண்மைக் குரல், உமர்கய்யாம், உம்மத், கடலோசை, கனியமுதம்,குவ்வத், கூவ்வத், சமரசம், சமாதன வழி, சம்சுல் அக்பர், சம்சுல் ஈமான், சரீஅத் பேசுகிறது,சுபவரம், செம்பிறை, ஜோதிடச் சுடர் ஒளி, தத்போதம், தெய்வச் சேக்கிழார், நம் உரத்த சிந்தனை, நம்ம ஊரு செய்தி, நாம், புதிய மனிதன், பெந்தகொஸ்தின் பேரொலி, மகளிர் சிந்தனை, மகாகவி, மடீட்சியா செய்தி இதழ், மனுஜோதி, மலர்மதி, மின்மினி, முகமது, முழக்கம், முஸல்மான், முஸ்லிம் சுடர், விசுவாமித்திரன், வெள்ளி மலர்,
பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளிலிருந்து தோன்றியவை தான் சிற்றிதழ்கள் என்பர். நவீன இலக்கியத்தின் கோட்பாடுகள் அல்லது வரையறைகள் பெரும்பாலும்  மேலைநாட்டின் தாக்கத்தால் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தொல்காப்பியக் கோட்பாடுகள், செவ்விலக்கியக் கோட்பாடுகள் என்று தமிழ் - தமிழ் எனும் நிலையிலிருந்தும் பிரித்தறிகின்ற பான்மை அண்மையில் பரவலாக்கம் பெற்றுள்ளது. அதாவது மேலைநாட்டு எழுத்துப் பரம்பரையை உட்செறித்து அவ்வப்போது தமிழ் இலக்கியத்திலும் சில மாற்றங்கள் நிகழ்ந்தேறியுள்ளன. அதே போன்று எழுத்துலகத்திற்கான ஊடகங்களைத் தெரிவு செய்வதும் மிக முக்கியமானதாகும். அதில் பெரும் புரட்சி செய்த ஊடகமே சிற்றிதழ்கள். காரணம் குறிப்பிட்ட சமூகத்தில் பெரிதளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஆற்றல் சிற்றிதழ்களுக்குண்டு.
தமிழ் இதழியலில் எண்ணிக்கையிலும் ஆழத்திலும் பரப்பிலும் சிற்றிதழ்களே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சிற்றிதழ் என்பது தீவிரமான உள்ளடக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட வாசகர்களைச் சென்றடையும் இதழ் ஆகும். கட்டுரை, கருத்துரை, விமர்சனம், திறனாய்வு, துறைஆய்வு, விவாதம், நேர்காணல், செய்யுள், கவிதை, உரைவீச்சு, சிறுகதை, தொடர்கதை, துணுக்குகள், நகைச்சுவை, சித்திரக்கதை எனப் பல்வேறுவகைப்பட்ட ஆக்கங்களை ஒரு சிற்றிதழ் தாங்கிவரும். சிற்றிதழின் முதன்மை நோக்கம் கருத்துப்பகிர்வே. அதாவது வியாபார நோக்கில் இலாபம் ஈட்டுவதைச் சிற்றிதழ் பொதுவாக முதன்மைக் குறிக்கோளாய் கொள்வதில்லை. (wikipedia.org)
ஆகவே கருத்துச் சுதந்திரம் மிக்க ஓர் ஊடகமாகச் சிற்றிதழ்கள் திகழத் தொடங்கின. வெறும் கவர்ச்சிகரமான பிற்போக்குத்தனமான எழுத்துலகிலிருந்து தன்னை முழுவதுமாக வேறொரு தளத்தில் அடையாளப்படுத்திக் கொண்ட ஊடகமே சிற்றிதழ். ஏறத்தாழ சட்ட ரீதியான முன்னெடுப்புகள், புள்ளி விவரத்துடனான கருத்துச் செறிவு, சமூகத்தின் மீதான தர்க்க விவாதங்கள், ஆற்றல் மிக்க ஆக்கப்பூர்வமான எடுத்துரைப்புகள் முதலானவற்றைப் பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் எடுத்துரைக்கின்ற ஊடகமாகப் பரவத் துவங்கியது.
இது வணிக நோக்கில் அமையாததால் கூடிய விமர்சன கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டது. புனிதங்களைக் கட்டுடைப்பதிலும் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதிலும் சிற்றிதழ் பங்கு கொள்கின்றது. விளிம்புநிலை மனிதர்களைப் பற்றியும்பொதுக் கவனத்தைப் பெறாத பிரச்சினைகள் பற்றியும் சிற்றிதழ்குரல் எழுப்புகிறது. கலகக்காரர்களின் குரல்களை ஒலிக்கச் செய்கிறது. சிற்றிதழ் சமூகத்தின் தொடர் கதையாடலின் ஒரு களமாக இருக்கிறது. துறைசார் விடயங்களை ஆய்வுக்குட்படுத்தி ஆவணப்படுத்துகிறது.(wikipedia.org)
சிற்றிதழ்கள் தோன்றக் காரணம்
   சிற்றிதழ்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் சமகால வரலாற்றைத் திருத்த முயற்சி செய்ய வேண்டிய ஊடகங்களின் அக்கறையின்மையேயாகும். வாசகர் ஈர்ப்பு, வணிக நோக்கு, விளம்பரப்படுத்தம், பிரபலமாவதற்கான வழிமுறைகளை நாடல், ஒருசார்புடைமை, குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் செல்லல் முதலான மெத்தன போக்குகளைக் கண்டு உரத்த குரல்கள் எழத் தொடங்கின. சிற்றிதழ்கள் தனது சுதந்திரமான முகாந்திரங்களைக் காட்ட,  தனித்தியங்கி மிக முக்கிய பிரச்சினைகளைச் சுட்டிக்காட்ட துவங்கின
வணிக இதழ்களின் செயல்பாட்டில் பிடித்தமில்லாத நிலையிலும் ஒரு படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை வெளியிடப்படாமல் நிராகரிக்கப்படும் நிலையிலும் தனது கருத்துகளை மாற்று வழியில் வெளி்ப்படுத்த கொண்டுவந்தது தான் பெரும்பான்மையான சிற்றிதழ்கள். இந்தச் சிற்றிதழ்களின் பெயர்கள் கூட சற்று வித்தியாசமாக இருக்கும். சில சிற்றிதழ்களுக்கு ஓரெழுத்துத் தலைப்பாக அ, ஓ, ழ என்று பெயரிடப்பட்டன. சில சிற்றிதழ்களுக்கு சுண்டெலி, வெட்டிப்பயல், மாமியா என்று நகைச்சுவையாகப் பெயர்கள் வைக்கப்பட்டன. இலக்கிய வட்டம், கசடதபற, சதங்கை, சூறாவளி, என்று சிறப்பான பெயர்கள் கூட சில வைக்கப்பட்டன. (wikipedia.org)
தொடக்ககால இதழ்களும் தமிழாய்வுகளும்
   செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, புலமை, தமிழ்ப்பொழில், தமிழியல், வையை, இளவேனில், ஆராய்ச்சி, மொழியியல், நாட்டுப்புறவியல், கலை, இமயமும் குமரியும் முதலான துவக்கக் கால இதழ்கள் தமிழிலக்கியங்களின் பெருமைபாராட்டல், பரப்புதல், கடும் விவாதங்களை முன்வைத்தல் என்கிற நிலைகளில் தனது பங்களிப்பைச் செய்து வந்தன.
   1902 ஆம் ஆண்டு முதல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் செந்தமிழ் இதழ் வெளியிடப்பெற்று வந்தது. இது தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தமிழறிஞர்களிடம் வெகுவாக பரப்புகின்ற பெருமுயற்சியைச் செய்து வந்தது. அதுமட்டுமன்றி அச்சாக்கம் பெற்ற பழமையான இலக்கியங்களின் மீதான விமர்சனங்களையும் முன்வைத்தது. பழம்பெரும் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் யாவரும் ஆரோக்கியமான விவாதங்களை முன்வைத்து ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு வித்தி்ட்டனர். மு.ராகவையங்கார், ரா.ராகவையங்கார் ஆகிய இருவரும் இவ்விதழின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்களாவர்.
தனி நூலாக வெளிவராத பல பழமையான தமிழ் இலக்கியங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளன. சங்கத் தமிழ் நூல்கள் விளக்கம், தமிழ்ப் புலவர்கள் குறிப்பு,தமிழ்த் தேர்வு விபரம் பல்சுவைக் குறிப்புகளை வெளியிட்டது (wikipedia.org)
  1923 ஆம் ஆண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் கொண்டுவரப்பட்டது செந்தமிழ்ச் செல்வி எனும் ஆய்விதழ். சங்க இலக்கிய ஆய்வுகளுக்கு முதன்மையளித்தும் தற்கால இலக்கிய விமர்சனங்களை அவ்வப்போது தாங்கியும் வெளிவந்தது
  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் 1925 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்விதழ் தமிழ்ப்பொழில் ஆகும். வடமொழிக் கலப்பின்றி தனித்தமிழில் எழுதி வெளியிடுதல் எனும் பொறுப்புடன் தமிழ்ப்பொழில் செயல்படத் துவங்கியது. சங்க இலக்கியக் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தமிழின் செழுமையையும் பரப்பிக் கொண்டிருந்தது.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களைத் தமிழ்ப் பேருலகினருக்கு நன்கு தெரிவித்து அன்னார் உதவிபெற்று அவற்றினை நிறைவேற்றுமாறு காண்டலும் தமிழ் மக்களையும் அவர்தம் தெய்வத் திருமொழியினையும் இழிதகவு செய்து உண்மை சரித நெறி பிறழ எழுதிவரும் விசயங்களை நியாய நெறியில் கண்டித்தலும் மேல்நாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அமைத்துக் கொள்ளுதலுமாகிய இன்னோரன்ன நோக்கங்களோடு சங்கத்தினின்று ஓர் சிறந்த தமிழ்ப் பத்திரிகை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஐவர் கொண்ட குழு ஒன்று 1914 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது (karanthaijayakumar.blogspot.)
என்கிற ந.மு.வே. யின் கருத்தினை நோக்கும் பொழுது சங்கத்தின் அருமை கூறல், தமிழாய்விற்கு வழிவகுத்தல் எனும் இரண்டு பிரதான நோக்கங்களுடன் வெளிவந்துள்ளதை அறியலாம். இவ்விதழ் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்றைய இதழின்  தரம் ஆய்விற்குட்பட்டது.   
    1972 இலிருந்து தமிழியல் ஆய்விதழ் வெளிவரத் துவங்கியது. தமிழாய்விதழாக இருந்தாலும் மிகுதியான ஆய்வுரைகள் ஆங்கிலக் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன. தமிழாய்வுகளும் தமிழ்சார் ஆங்கிலக் கட்டுரைகளும் கலந்து வெளிவந்து கொண்டிருந்தன. இந்தப் பகுப்பு முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்துள்ளது. 84 ஆய்விதழ்களை வெளியிட்ட உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் டிசம்பர் 2013 ஆம் ஆண்டு வெளியீட்டுடன் இவ்விதழை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டுள்ளது. (காண்க:www.ulagathamizh.org) தேர்ந்த அறிஞர்களால் தோற்றுவிக்கப்பட்டு தமிழாய்வுலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தமிழியல் இதழ் இன்று தடையுற்று நிற்பது தமிழாய்விற்கு பெரும் இழப்பேயாகும்.
 1975 ஆம் ஆண்டு பொற்கோவால் துவங்கப்பட்ட தமிழாய்விதழ் புலமையாகும். இதன் வீச்சு துவக்ககாலம் முதலாக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆராய்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து 70 களில் வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்று. காரணம் நவீன இலக்கியங்களின் தாக்கமாகும்.
1970 களில் முனைவர் பொற்கோ அவர்கள் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கீழைக்கலையியல் ஆப்பிரிக்கவியல் ஆய்வு நிறுவனத்தில் பணியில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்த வேளையில் அங்குள்ள பல நூலகங்களில் பல்வேறு மொழிகளுக்கான ஆராய்ச்சி இதழ்கள் உலகளாவிய உயர்ந்த தரத்துடன் இருந்த நிலையில் இலண்டன் பல்கலைக்கழகத்திலும் பிபிசி வானொலியிலும் ஆக்ஸ்போர்டு நூலகத்திலும் தமிழ் இடம் பெற்றிருந்தாலும் தமிழிற்காக எந்த ஒரு ஆராய்ச்சி இதழும் இல்லாத குறையைக் கண்டு மனம் வருந்தி இந்தியா திரும்பிய பின்னர் 1975 இல் தனது நண்பர்களின் துணையுடன் அறிஞர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் புலமை என்னும் ஆராய்ச்சி இதழாகும். ஆரம்ப நாட்களில் காலாண்டிதழாக வெளிவந்த புலமை சில வருடங்களின் பின்னர் அரையாண்டிதழாக மாறியது. பின்னர் இருமொழி இதழாக மாறியது. இதனால் தமிழ் தெரியாத ஆங்கிலமறிந்த மொழி ஆராய்ச்சியாளர்களின் கவனத்தையும் பெற்றது. இதழ் வெளிவரும் கால இடைவெளி மாறினாலும் கட்டுரைகளின் தரத்திலும் இதழ் அமைப்பிலும் எந்தவித குறைகள் இன்றி மேலும் மேலும் பொலிவு பெற்று வளர்ந்து வந்துள்ளது. (viruba.blogspot.com)
சங்க இலக்கியங்கள் குறித்த பெரும்பாலான விவாதங்களைப் புலமை துணிச்சலாக வெளியிட்டுக் கொண்டிருந்துள்ளமையை ஆய்வுரைகளின் வழி அறியலாம். கால ஆராய்ச்சி, சங்க இலக்கிய நேரெதிர்ச் சிந்தனைகள்  முதலானவை இடம் வகித்தன. இன்றளவில் தொடர்ந்து புலமை இதழ் வெளிவந்து கொண்டிருந்ததாலும் பெரும்பாலான ஆய்வாளர்கள் குறிப்பாக முனைவர்பட்ட ஆய்வாளர்கள் இதனைப் பயன்படுத்தாது ஆய்வை நகர்த்துவது தமிழாய்வின் ஆரோக்கியமற்ற போக்கிற்கு வழிவகுக்கும்..
நா.வானமாமலையால் துவங்கப்பெற்ற ஆராய்ச்சி எனும் ஆய்விதழ் 1969 ஆம் ஆண்டு முதல் தமிழாய்வினை முழுமுதலாகக் கொண்டு  1980 வரை தொடர்ந்து வெளிவந்துள்ளது. இதுவரை 22 இதழ்கள் வெளிவந்துள்ளன.
ஆராய்ச்சியை மட்டுமே தலையாயப் பணியாகக் கொண்டு தமிழில் வெளிவரும் பத்திரிகை இதுவொன்றே. பல பண்பாட்டுத் துறைகளிலும் ஆராய்ச்சி புரியும் வல்லுனர்களை அணுகி அவர்களது சிந்தனை முடிவுகளை வெளியிட்டு அறிவொளி பரப்ப முன் வந்துள்ள பத்திரிகை இதுவொன்றே. இதற்கு ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர் அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்பத்திரிகையைத் துவக்க முன்வந்தேன்.(1969:1) என்று தமது முதல் இதழில்  சுட்டிக்காட்டியுள்ளமையை இரா.காமராசு எடுத்துக்காட்டுகிறார். (keetru.com/ungalnooagam/mar07/vanamalai-3.)
இடதுசாரி இயக்கத்திலிருந்துகொண்டு தமிழின் அல்லது தமிழாய்வின் பரப்பை ஓரளவிற்குச் சுட்டிக்காட்ட இயலும் என்கிற நம்பிக்கையோடு துவங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியது என்றே கூற வேண்டும். இலக்கியம் என்கிற நிலையிலிருந்து கலை, பண்பாடு, மேலைநாட்டுக் கோட்பாட்டோடு பொருத்துதல், நாட்டார் வழக்காற்றியல், தொல்லியல் முதலான களங்களை ‘ஆராய்ச்சி இதழ் தீவிரமாகச் சுட்டிக் கொண்டிருந்தது. உலகத்தரமிக்க ஆய்விதழாக ஆராய்ச்சி இதழ் திகழ்கிறது என்று பொற்கோ சுட்டிக்காண்பித்திருப்பதன் மூலம் .இதன் சிறப்பை உணரலாம்.
மதுரையிலிருந்து வையை எனும் ஆய்விதழ் வெளிவந்தது. ஆனால் சில வெளியீடுகளோடு இவ்விதழ் நின்று போனது. இதேபோன்று திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த இளவேனில் இதழும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவையெல்லாம் இடையிடையே நின்றுவிட்டன.
19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து இதழியல் துறை தமிழகத்தில் காலூன்றினாலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்துதான் தமிழாய்வு இதழ்களினூடாக பரவத் துவங்கியது. பெரும்பாலான ஆய்வாளர்கள் ஆய்விதழ்களில் வெளியிட்ட கட்டுரைகளை நூலாக்கியும் வெளியுலகிற்கு அறிமுகமாக்கினர். ஆய்விதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் அதிகமாகக் கவனிக்கப்பட்டதே இதற்குக் காரணம். 20 ஆம் நூற்றாண்டின் துவக்கக்காலம் ஏறத்தாழ விடுதலை வேட்கை, தமிழ்ப்பற்று, அந்நியமொழி எதிர்ப்பு, ஆதரவு, தமிழரின் பண்பாட்டு மெய்யியலை வெளிப்படுத்துதல், பழமை பாராட்டல் முதலான வரலாற்றுப் பொதியுடையது.
  ஆரோக்கியமான விவாதங்களுடனும் முழுமுதற் அக்கறையுணர்வுடனும் பெரும்பாலான துவக்கக் கால இழ்கள் வெளிவந்துள்ளன. பழங்காசு, அஃகு முதலான பெரும்வரவேற்பு பெற்ற இதழ்கள் கூட நிலைத்து நீடிக்க முடியாத  அவல நிலையைத் தமிழாய்வு வரலாற்றில் காணமுடிகிறது. நோக்கம் என்பதில் தெளிவு கொண்டவைகளாக இருந்தன. கடுமையான சூழலிலும் இதழினை வெளியிட வேண்டும் எனும் எண்ணப்பாடுடன் ஆசிரியர்கள் திகழ்ந்துள்ளனர்.
இத்துடன் பொழிற் கையொப்ப விண்ணப்பம் ஒன்று இணைத்துள்ளோம். தங்கள் நண்பருள் ஒருவரையேனும் கையொப்பக்காரராகச் சேரும்படி வேண்டி இணைத்துள்ள விண்ணப்பத்தில் அவர்கள் ஒப்பம் வாங்கி அனுப்ப வேண்டுகிறோம். ஒருவரைத் தாங்கள் சேர்த்தனுப்புவது பொழிலின் பயனை ஆயிரவர்க்கு அளித்ததானும் என்பதை நினைவூட்டுகிறோம். சிறுதொண்டு பெரும்பயன் விளைவிக்கும் வகைகளுள் இது ஒன்றெனக் கருத்திற் கொள்ள வேண்டுகிறோம்.
என்று உமாமகேசுவரனார் தமிழ்ப்பொழில் வணிக அளவில் பெரும் பாதிப்புக்குட்பட்டு பலரின் நன்கொடையை எதிர்கொள்ள வேண்டிய நிலைப்பாட்டினைச் சுட்டுகிறார்
ஆராய்ச்சி ஆர்வமுடைய அனைவரும் இப்பத்திரிகை நீடித்துப் பணிபுரிய வேண்டும் என விரும்புகிறார்கள். விருப்பங்கள் குதிரைகளாகி விட்டால் பிச்சைக்காரர்களும் சவாரி செய்ய முடியும் என்றோர் ஆங்கிலப் பழமொழி உண்டு. ஆனால் விருப்பங்கள் குதிரைகளாவதில்லை என்பதை நாமறிவோம். விருப்பங்கள் குதிரைகளாவதற்கு விடாமுயற்சியும் பணமும் தேவை. ஆராய்ச்சிக்கு அதன் கட்டுரையாளர்களின் மூளை பலம் தவிர வேறு பண பலம் கிடையாது. சந்தா வரவும், விற்பனை வரவும் தான் அதன் வருவாய்த்துறைகள். வியாபார நோக்கத்துக்காக அல்லாமல் சுமார் 20 ஆராய்ச்சி நண்பர்கள் ஆராய்ச்சி இதழை விற்றுத் தருகிறார்கள். (keetru.com/ungalnooagam/mar07/vanamalai-3.)
இது ஆராய்ச்சி இதழை நடத்திய நா.வா.வின் எழுத்துரை. எக்காரணம் கொண்டும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதழ் நின்றுவிடக் கூடாது. என்பதில் பலர் தீவரமாக தொழிற்பட்டுள்ளனர். சிலர் தமிழார்வலர்கள் காப்பாற்றுவர் என்கிற நம்பிக்கையுடன் இதழ்களைத் துவங்குகின்றனர். ஆனால் உண்மையில் தமிழார்வலர்களில் சிலரைத் தவிர பலர் இதுபோன்ற சிற்றிதழ்களை ஆதரிக்கவில்லை என்பது மனங்கொள்ளத் தக்கது. ஜனரஞ்சகமான இதழ்கள் இன்று வணிக அளவில் பெரும் வெற்றிபெற்றுவிடுகிறது. ஆனால் தமிழ், தமிழர், தமிழ்மொழி என்கிற பரந்த நோக்குடன் வெளிவருகின்ற எந்த ஆய்விதழ்களும் பெரும் வெற்றியடையவில்லை என்று குறிப்பிடலாம். இதற்குக் காரணம், வணிக எதிர்பார்ப்பின்றி தமிழ்ப்பணியாற்றும் எண்ணத்தடன் துவங்குகின்ற இதழாசிரியர்கள் அன்று. வாசகர்களாகிய நாமே பொறுப்பேற்க வேண்டும். துவக்க கால இதழ்களுக்குப் பொருளாதார நெருக்கடி இருந்தது. ஆனால் பிற்கால இதழ்களுக்கு இந்நெருக்கடி பெரிதளவில் இல்லை எனலாம்.
பிற்கால இதழ்களின் போக்குகள்
அகப்புறக் கட்டமைப்பில் சிற்சில மாற்றங்களைச் செய்தபடி தற்காலத்தில் பல இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்.
1945வரை மணிக்கொடி இதழும் 1950 முதல் 1970 வரை எழுத்து இதழும் 1970 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வானம்பாடி இதழும் தமிழிலக்கிய உலகில் புதிய வாசிப்பு முறையை உண்டாக்கின.  மணற்கேணி, அரிமா நோக்கு, சிற்றேடு, தமிழினி, உங்கள் நூலகம், காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, கிழக்கு திசை, உயிரெழுத்து, வல்லினம், தலித் முரசு, காவ்யா, இளந்தமிழன், புதுப்புனல், தென்மொழி, அறிக அறிவியல், சமூக விஞ்ஞானம், ஆய்த எழுத்து, மாற்றுவெளி, கவிதாதிறன், தாமரை, மாற்று, பனுவல், நிழல், புதிய கோடாங்கி, புத்தகம் பேசுது,அம்ருதா, வடக்குவாசல், ஜெயபாரதி, சூறாவளி, கிராம ஊழியன், கலாமோகினி, கசடதபற, கணையாழி, கண்ணதாசன், சதங்கை, செம்மலர், மனிதன், ஞானரதம், வேள்வி, கார்க்கி, பிரச்சினை, உதயம், மெய்ப்பொருள், நீ, பிரக்ஞை, விவேகசித்தன், காற்று, நடை, சிகரம், இலக்கிய வட்டம், ஏன், சுவடு, அஃகு, புத்தவிமர்சனம், தெறிகள், நாணல், தொடுவானம், சோதனை, சிவந்த சிந்தனை, வண்ணங்கள் போன்ற இதழ்களும் இக்கால இலக்கியங்களான கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் முதலானவற்றை மக்களிடையே மிகத் தீவிரமாக எடுத்துரைத்துக் கொண்டிருந்தன.
தமிழகத்தில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த பல இதழ்களும் தமிழ்ப்பணியாற்றிக் கொண்டிருந்தன. யாழ்ப்பாண இணைய நூலகம் ஏறத்தாழ 600 வகையான இதழ்களைச் சேகரித்து வைத்துள்ளது. அவற்றுள் சில வருமாறு:
அகல், அகல்விழி, அகிலம், அக்கினிக்குஞ்சு, அக்னி, அங்குசம், அஞ்சலி, அனுபவ தீபம், அன்புநெறி, அபிநயா, அமுது, ஆக்கம், ஆரண்யப்பிரசாதம், ஆறுதல், ஆற்றல், ஆலயமணி, இதயம், இந்து ஒளி, இந்து தருமம், இளம்பிறை, இளைஞன், ஈழகேசரி, உதயம், உயிர்ப்பு, ஊரோசை, எதிர்காலம், ஏகலைவன், ஐக்கிய தீபம், ஒளி அரசி, ஓசை, கட்டியம், கதிரொளி, கலப்பை, கீழைக்காற்று, குறிஞ்சித்தமிழ், சமாதானம், சமூகவெளி, சங்கத்தமிழ், தமிழ்ச்செல்வி, தர்மநெறி, தாயகம், தாரகை, தேனருவி, நங்கை, நவரசம், நாதம், நான், நாற்று, நெய்தல், பசுந்தோகை, படிகள், பயில்நிலம், பல்லவி, பிரகாசம், புலம், பூங்காவனம், பூந்தளிர், பூவிழி, பெண்ணின் குரல், மகாஜனன், மக்கள் மன்றம், மணிமஞ்சரி, மதுரத்மிழ், முகடு, முஸ்லீம் மித்திரன், மெய்யியல் நோக்கு, மௌனம், யாத்ரா, ரோஜா, லங்கா டுடே, வகவம், வடு, வயல், வானம்பாடி, விருட்சம், வெண்ணிலவு, வைகறை என்று மொத்தம் 6578 இதழ் தொகுப்புகளைக் கொண்டுள்ளது (காண்க:www.noolagam.org)
மேற்குறிப்பிடப்பெற்றவை அனைத்தும் முழுக்க முழுக்க இலக்கிய இதழ்கள் என்று கூறிவிட இயலாது. சமூகவியல் சிந்தனை, அரசியல், பகுத்தறிவு, வரலாற்றியல், அறிவியல், மெய்யியல், பண்பாட்டு மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல்,சித்தாந்தம், கம்யூனிசம் என்று குறிப்பிட்ட நோக்கங்களுடன் வெளிவந்த இதழ்களும் இவற்றுள் ஏராளம் உண்டு. அவற்றுள் பெரியாரால் வெளியிடப்பெற்ற குடியரசு, விடுதலை ஆகிய இதழ்கள் தமிழக வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்தவை. வரலாற்றியலில் மாற்றத்தை உண்டுசெய்த இதழ்களுக்கு மத்தியில் சில பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்டும் வெளிவந்து கொண்டிருந்தன.
       மேற்குறிப்பிடப்பெற்ற இதழ்களுள் 90 விழுக்காடு வணிக நோக்கினை மையமாகக் கொண்டு வெளிவந்தவையாகும். இப்போக்கு தமிழாய்வு வளர்ச்சிக்கு உகந்ததன்று. புத்தகம், இதழ், முதலானவற்றைச் சந்தைப்படுத்துதல் என்பது தமிழ்ச்சூழலில் கடினமான ஒன்று. இருப்பினும் புதிய புதிய இதழ்கள் நோக்கம் என்னவென்றே தெரியாமல், தெரியப்படுத்தாமல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. துவக்ககாலத்தில் முழு வீச்சுடன் துவங்கப்படுகின்ற இதழ்கள் குறுகிய காலத்தில் தனது செல்வாக்கினை இழக்க நேரிடுகிறது. இதற்குக் காரணம் செறிவின்மையும் மாற்று அணுகுமுறையின்மையும் தான். குறிப்பாக ஆய்வாளர்களைச் சென்றடைய வேண்டிய முக்கியப் பணியைக் கூட இன்றைய ஆய்விதழகள் செய்ய மறந்துவிடுகின்றன. ‘இதழின் நோக்கம் ஆய்வாளர்களை மையமிட்டதன்று அனைத்துத்தரப்பினருக்கும் உரியது’ என்று சப்பைக்கட்டு இடுகின்ற ஏராளமான இதழ்கள் பெருகி வருகின்றன. மறுமுனையில் ஒருசில இதழ்கள் துவக்ககால இதழ்களைப் போன்று சீரிய பணியாற்றி வருகின்றன.
   நவீன இலக்கியங்களுக்கென தோன்றிய எழுத்து,வானம்பாடி,மணிக்கொடி, சூறாவளி முதலான இதழ்களுக்கிடையே இருந்த செழுமையும் வளமையும் ஆரோக்கியம், ஆரோக்கியமற்ற விவாதங்களும் வரலாற்றில் மிக முக்கியமானவை. அதிலும் குறிப்பாக சூறாவளி தனது பெயருக்கு ஏற்றாற் போன்று நேரடியான விமர்சனங்களை முன்வைத்து சமகாலத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. (காண்க: வல்லிக்கண்ணன், புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்)
ஆக, இதழ்கள் ஏராளமான படைப்பாளிகளை உருவாக்கின. நல்ல படைப்புகளையும் அளித்தன. ஆனால் நல்ல வாசகர் வட்டத்தினை உருவாக்கினவா? என்ற வினாவிற்கு பதிலிறுக்க இயலாது. குறிப்பிட்ட இதழ்கள் ஆய்வாளர்களிடம் அதிகத் தொகையை ஆண்டுச் சந்தாவாகப் பெற்றுக்கொண்டு கட்டுரையின் தரம் நோக்காமல் வெளியிடுகின்ற போக்கினைக் காணமுடிகின்றது. முனைவர் பட்டம் நிறைவு செய்ய வேண்டுமானால் ISSN தகுதி பெற்ற இதழ்களில் ஏதேனும் இரண்டு கட்டுரைகள் வெளியிட்டிருக்க வேண்டும் எனும் பல்கலைக்கழக கெடுபிடியால் சிந்தனாத்திறமற்ற ஆய்வாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்ற போக்கினைக் காணமுடிகிறது. இதனால் மலிவுமிக்க இதழ்களும் தோன்றலாயின. இங்கு பணமே மூலதனமாவதால் ஆய்வு என்பது புறந்தள்ளப்பட்டுவிடுகிறது. இதற்கு மாற்றுச் சிந்தனையுடன் ஒரு புதிய அணுகுமுறையை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும்.
அதேசமயம் தரமான ஆய்வுகளை மட்டுமே வெளியிடுகின்ற இதழ்களும் உண்டு. மணற்கேணி போன்று வளந்து வருகின்ற இதழ்கள் தனது நோக்கத்தினின்று விலகாமல் ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் வளர்ந்து வருகின்ற இதழ்கள் ஆய்வாளர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை. வெளிப்படையாகக் கூறின் வாய்ப்பளிக்க யோசிக்கின்றன. ஆக ஆய்விதழ்களுக்கும் ஆய்வாளர்களுக்குமான இடைவெளி இன்னும் விரிவாக்கம் பெறுகிறதே தவிர இணக்கமான தன்மை இக்காலத்தில் இன்னும் ஏற்படவில்லை.
     தொகுப்புரை
ü  துவக்ககாலத்தில் மிகுதியான இதழ்கள் தோன்றி மறைந்துள்ளன. ஆனால் சமுதாயத்தில் ஏதோவொரு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றன.
ü  துவக்ககால இதழ்களுக்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் இருந்தன. வாசகர் வட்டம் பெருகியது.
ü  பிற்கால இதழ்கள் மிகுதியாக இருந்தாலும் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ü  அரசியல், இந்தியப் பண்பாடு, உலக வரலாறு, மேலைநாட்டுக் கோட்பாடு என்று தன்னைத் தனித்துவப்படுத்திக் கொண்டாலும் ஆய்வு எனும் நிலையில் பெரிதளவிலான மாற்றத்தை உண்டுபண்ணவில்லை.
ü  வணிக ரீதியான இதழ்களும், தரமற்ற ஆய்விதழ்களும் இக்காலத்தில் பல்கிப் பெருகின
ü  ஆய்வாளர்களிடம் மாற்றுச்சிந்தனையை உருவாக்க வேண்டிய பெரும்பாலான சிற்றிதழ்கள் இன்னும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே போராடிக் கொண்டிருக்கின்றன
உசாத்துணை
Ø   மணற்கேணி, இதழ்: 11,13, புதுச்சேரி
Ø  ச.அகத்தியலிங்கம், சங்க இலக்கிய ஆய்வுகள் செய்தனவும் செய்ய வேண்டுவனவும், திருவனந்தபுரம்
Ø  வல்லிக்கண்ணன், புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்
Ø  www.wikipedia.org
Ø  patchabala.blogspot.com
Ø  karanthaijayakumar.blogspot.
Ø  viruba.blogspot.com
Ø  keetru.com/ungalnooagam/mar07/vanamalai-3.
Ø  www.noolagam.org

Share
Posted in: Posted on: வியாழன், 3 மார்ச், 2016

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.