புதன், 24 ஆகஸ்ட், 2016

சங்க ஏடு - கர்ப்பிணி தலைவியும் காதல் பரத்தையும்

Ulagasivan Sivan  /  at  ஆகஸ்ட் 24, 2016  /  2 comments

சங்க ஏடு - கர்ப்பிணி தலைவியும் காதல்                              பரத்தையும்

பண்டைக் காலத்தில் ஆண், பெண் உறவுமுறையினூடாக நம் முன்னோர்களின் குடும்பப் பின்னனியை ஓரளவிற்கு அறிந்துகொள்ள முடிகிறது. திணை அடிப்படையில் நிலத்தினைப் பிரித்து ஒவ்வொரு (குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை) நிலத்திற்கும் ஒவ்வொரு வகையான ஒழுக்கங்களை (பழக்கவழக்கங்கள் என்று ஊகித்துக்கொள்க) சுட்டியுள்ளனர். இவற்றுள் மருதத்திணை ஏனைய திணைகளைக் காட்டிலும் குடும்பப் பின்னனியைச் சார்ந்தது என்று குறிப்பிடலாம். தலைவன்,தலைவி,தோழி மூவரும் முக்கியக் கதாபாத்திரங்கள். இம்மூவருக்குமிடையேதான் பெரும்பாலும் உரையாடல் நிகழ்ந்திருக்கிறது. அப்படி உரையாடும் பொழுது வெறும் கருத்தை மட்டுமே கூறுவதாகப் புலவர்கள் பாடலைப் புனையவில்லை. இயற்கையை வருணித்து அதனூடாகத் மாந்தர்களது உணர்வுகளைப் பதிவு செய்துள்ளனர். அப்படி ஒரு அருமையான குடும்பப் பின்னனியில் அமைந்துள்ள கருத்து வருமாறு:  
  தலைவி கர்ப்பமடைந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள். ஆனால் தலைவன் குழந்தையை ஈன்றுள்ள தனது மனைவியை விட்டு நீங்கி பரத்தையரிடம் சென்று அவளுடன் வாழ்ந்து வருகிறான். இப்படியே பல நாட்கள் கழிந்த பின்பு திடீரென மனைவியும் குழந்தையும் நினைவுக்கு வர மீண்டும் தனது இல்லத்தை நோக்கி வருகிறான். இப்போது தலைவனை நோக்கி தலைவி மெல்லிய கோபத்துடன் பேசுகிறாள்அந்தப் பேச்சு அத்தனை அழகு வாய்ந்தது. கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்..!
         பழனப் பல்மீன் அருந்த நாரை
         கழனி மருதின் சென்னிச் சேக்கும்
         மாநீர்ப் பொய்கை யாணர் ஊர!
         தூயர் நறியர் நின்பெண்டிர்
         பேஎய் அனையம்யாம் சேய்பயந் தனமே
                   (ஐங்குறுநூறு - 70)
புதுக்கவி வடிவம்                                                                              
எல்லோரும் பயன்படுத்துகின்ற
அழகுமிகு குளம்..
சிறிய குளம் என்றாலும்
அதில் எத்தனை வகை மீன்கள்..
அடடா கண்கொள்ளாக் காட்சி..
அதோ
துள்ளித் திரிந்த
ஏதோ ஒரு வகை மீனை
எங்கிருந்தோ பறந்து வந்த
அந்த நாரை
கொத்தித் தூக்கிக் கொண்டு செல்கிறது..
தூக்கிக் கொண்டு எங்கு சென்றது..?
அதோ
வயல்வரப்பில் வளர்ந்துள்ள
மருத மரத்தின் உச்சிக்கே
கொண்டு சென்றது..
தண்ணீரில் இருந்த மீன் இப்போது
மரத்தின் உச்சியில்..
உயிர் மட்டும் இல்லை அவ்வளவுதான்..
இத்தகைய வளமைக்குக் காரணம்
பெருக்கெடுத்து ஓடுகின்ற நீர்தான்.. 
இப்படி வளமை மிக்க
ஊருக்குச் சொந்தக்காரனே..!
நான் பிள்ளையைப்
பெற்றுவிட்டதால்
உன் கண்களுக்கு இப்போது
நான் பேய் போன்று
தெரிகின்றேன் அல்லவா...?
என்னைவிட உன் பரத்தையரே
தூயவர்
நறுமணம் மிக்கவர்
ஆகையால் நீ
அங்கேயே செல்வாயாக
என் அன்புக் கணவனே..!
உரைவடிவம்
  எல்லோருக்கும் பொதுவான ஒரு நீர்நிலையில் பலவகையான மீன்கள் துள்ளித்திரிந்ததைக் கண்ட நாரை மீன் ஒன்றைக் கவ்விக்கொண்டு மருத மரத்தின் உச்சிக் கிளைக்குச் சென்று அமர்ந்தது. இத்தகைய வளத்திற்குக் காரணமான நீர்ரிலையை உடைய ஊரனே! நான் குழந்தையைப் பெற்றதால் நான் பேய் போன்று இருப்பதாகக் கருதிப் பரத்தையரை நாடிச் சென்றாய். செல்வாயாக என்னை விட பரத்தையரே தூயவர். நறுமணம் வீசக்கூடியவர்.
பெறக்கூடிய கருத்து
மனைவி  கர்ப்பமடைந்துள்ள காலத்தில் தலைவன் பரத்தையை நாடிச் சென்றுள்ளான்
சென்னி என்றால் தலை, உச்சி என்று பொருள். சென்னிமலை எனும் ஊர் ஈரோடு பகுதியில் உள்ளது. இதற்கு உச்சிமலை என்று பொருள் கொள்ளலாம். இவ்வூர்ப் பெயர் சங்க காலத்தைய சொல்லாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
நாரையாகிய தலைவன் பல்வகை மீன்களாகிய பல பரத்தையரோடு உறவுகொண்டு பழனமாகிய அவர்களது இல்லத்தில் வாழ்ந்து வந்தான். மருதமாகிய அவனது சொந்த இல்லத்தை மறந்து விட்டு என்பது இதனுள் பொதிந்து கிடக்கும் பொருள்.

பேய் எனும் நம்பிக்கை சார்ந்த சொல் கையாளப்பெற்றுள்ளது.

Share
Posted in: Posted on: புதன், 24 ஆகஸ்ட், 2016

2 கருத்துகள்:

  1. தங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது. பாடலுக்கான விளக்கம் நன்று.
    தொடர்க...

    பதிலளிநீக்கு

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.