வெள்ளி, 4 மார்ச், 2016

ஐங்குறுநூறும் முத்தொள்ளாயிரமும்

Ulagasivan Sivan  /  at  மார்ச் 04, 2016  /  No comments

                  

                                                                              
   சங்கப் பனுவலில் ஒன்றான ஐங்குறுநூற்றினையும் சங்க இலக்கியங்களுக்குப் பின்னர்த் தொகுக்கப்பெற்ற முத்தொள்ளாயிரத்தையும் அகப்புற நிலையில் ஒப்பிட்டு விளக்குவது இவ்ஆய்வுரையின் நோக்கமாகும். இவ்ஆய்விற்கு ஐங்குறுநூறு முழுமையும் முத்தொள்ளாயிரத்தின் சேரர் பற்றிய பாடல்களும் ஆய்வு எல்லையாகக் கொள்ளப்பெற்றுள்ளன.
படைப்பாக்கப் பின்புலமும் தொகுப்பாக்கப் பின்புலமும்
   ஐங்குறுநூறும் முத்தொள்ளாயிரமும் வெவ்வேறு அரசுசார் நிறுவனங்களில் தோற்றம் பெற்றவை; தொகுக்கப்பெற்றவையாகும். ஐங்குறுநூறு ~யாராலும் தொகுக்கப்பெறவில்லை. மாறாக,தனியொருவரால் அல்லது குழுக்களால் திட்டமிட்டு இயற்றப்பெற்றது’(.தட்சிணாமூர்த்தி,2;003:23) எனும் கருத்தினை .தட்சிணாமூர்த்தி முன்வைக்கின்றார். இருப்பினும் ~மருதம் ஓரம்போகி நெய்தல் அம்மூவன்என்கிற பழம்பாடலால் ஐங்குறுநூறு ஐந்து புலவர்களால் பாடப்பெற்றது என்றும் யானைக்கட்சேய் தொகுப்பிக்க, கூடலூர் கிழாரால் தொகுக்கப்பெற்றது என்றும் அறிஞர் பலரால் சுட்டப்பெற்றது. ஐங்குறுநூறு தனியொருவரால் இயற்றப்பெற்றதா? குழுக்களால் திட்டமிட்டு இயற்றப்பெற்றதா? வெவ்வேறு புலவர்களால் வெவ்வேறு காலக்கட்டங்களில் இயற்றப்பெற்றுக் கூடலூர் கிழாரால் தொகுக்கப்பெற்றதா? என்கிற வினாக்களின் ஊடாக ஐங்குறுநூற்றின் படைப்பாக்க, தொகுப்பாக்கப் பின்புலத்தை ஆராய வேண்டியுள்ளது. இச்சிக்கல் முத்தொள்ளாயிரத்திற்கும் இருப்பதை அறிய இயலுகின்றது.
   சேர,சோழ,பாண்டிய மன்னர்களை ஒருவரே பாடியுள்ளாரா? மூன்று வேந்தர்களைப் பற்றிய தொள்ளாயிரப் பாடல்களா? அல்லது மூன்று வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரப் பாடல்களா? என்பதை அறிய இயலவில்லை. முத்தொள்ளாயிரத்தை ஒருவரே இயற்றியிருந்தால் பெரும்பான்மையான பாடல்கள் கிடைத்திருக்கக் கூடும். புறத்திறட்டிலிருந்தும் இலக்கண உரையிலிருந்தும் தேடித் தொகுத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. முத்தொள்ளாயிரத்தை ஒருவரே இயற்றியிருப்பின் இத்தகைய சமத்துவ முயற்சியை மேற்கொண்டுள்ளதன் அரசியல் பின்னணி யாது? இந்நிலையில் சங்க இலக்கியங்களை நன்கு கற்றறிந்த சான்றோர் ஒருவராலோ அல்லது அறிவுக்குழுவினாலோ முத்தொள்ளாயிரம் இயற்றப்பெற்றிருத்தல் வேண்டும் என்கிற கருத்தினை முன்வைக்க நேரிடுகின்றது. அரசு சார்ந்த நிறுவனம் ஒன்றினால் அறிவுக்குழு உருவாக்கப்பெற்றுத் திட்டமி;ட்டு இயற்றப்பெற்றதாக முத்தொள்ளாயிரத்தைக் கருத நேரிடுகின்றது. இதற்குச் சமூக அரசியல் பின்னணி சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பெறல் வேண்டும். முத்தொள்ளாயிரப் பாடல்களில் காணப்பெறுகின்ற பகுப்பு முறை, பாடல் வைப்பு முறை, யாப்பமைதிசொல் ஆளுகை, கருத்துப் புலப்பாட்டு நெறி,எதுகை மோனை அமைப்பு முறை, மெய்ப்பாடுரைத்தல் முதலான புலமைத்துவ உத்திகள் இவ்அறிவுக்குழுவினால் வரையறுக்கப்பெற்றிருக்க வேண்டும் எனக் கருதுதற்கு வாய்ப்பமைகின்றது.
இந்நூலின்(ஐங்குறுநூறு)அமைப்பு இது ஒருவரால் பாடப்பட்டிருக்கலாம் என்ற கொள்கைக்கு இடம் தருகின்றது. ஐந்து பகுதிப் பாடல்கட்குமிடையே காணப்படும் ஒற்றுமைகளே சிறந்த சான்றுகளாக அமையும்(.தட்சிணாமூர்த்தி,2003:18).
என்று ஐங்குறுநூற்றின் அமைப்பு முறையை ஆராய்ந்து உரைத்துள்ள .தட்சிணாமூர்த்தியின் கருத்து முத்தொள்ளாயிரத்திற்கும் பொருந்துவது குறிப்பிடத்தக்கது.
நாடக வழக்கினும் உலக வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரிய தாகும் என்மனா் புலவர்   (தொல்,அகத்.53)
எனும் தொல்காப்பிய விதியினை நோக்கும் பொழுது சங்க இலக்கியங்களுள் கலித்தொகையும் பரிபாடலும் பழைய மரபினைப் புதுப்பிக்க எழுந்த மாற்று முயற்சிகள் என்பதை எளிதில் தெளியலாம். ஏறத்தாழ முத்தொள்ளாயிரமும் சங்க இலக்கியங்கள் வகை,தொகைப்படுத்தப்பெற்றுப் பரந்துபட்ட வாசிப்பிற்குள்ளான காலக்கட்டங்களில் சங்க இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்த சான்றோர் ஒருவரால் ()குழுவினால் சங்க மரபை உணர்த்தும் பொருட்டும் அதேசமயம் புதுமரபினைப் புகுத்தும் பொருட்டும் இயற்றப்பெற்றிருக்க வேண்டும் என்று கருத வாய்ப்புள்ளது.
ஐங்குறுநூற்றின் புத்தாக்க முயற்சி முத்தொள்ளாயிரம்
     சேர நாட்டைச் சார்ந்த புலவரால் ஐங்குறுநூறு இயற்றப்பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு அகச்சான்றுகள் உள. “வாழி ஆதன் வாழி அவினிஎனும் சேர அரசன் முதல் பத்தில் பாடப்பெற்றமை; சேரர் பகுதியான தொண்டியை மையமிட்டுத் தொண்டிப் பத்து அமைந்துள்ளமை ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.
இந்நூல் சேர நாட்டில் தோன்றியது என்பதில் ஐயமில்லை. ஆதன் அவினியைப் பாடும் பத்து முதலில் அமைவதும், தொண்டிப்பத்தும், பதிற்றுப்பத்தினையொட்டிய அமைப்பும்,சிலம்பின் கருத்துக்கள் சில இடம் பெறுவதும் இதற்குச் சான்றாம்    (.தட்சிணாமூர்த்தி,2003:29).
சேரரைப் பாடிய ஐங்குறுநூறு ஏனைய அரசர்களை()வேற்று அரசுசார் பகுதிகளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிடவில்லை. ஆங்காங்கே சிறு குறிப்புகளாகப் பதிவு செய்துள்ளமையைக் காணலாம்.
திண்டேர்த் தென்னவ னன்னாட் டுள்ளதை
வேனி லாயினுந் தண்புன லொழுகுந்
தேனூ ரன்னவிவ டெரிவளை நெகிழ (ஐங்.54)
எனப் பாண்டிய மன்னனின் தேனூரும்
             பகல்கொள் விளக்கோ டிராநா ளறியா
             வெல்போர்ச் சோழ ராமூ ரன்னவிவ(ஐங்.56)
எனச் சோழனின் ஆமூரும் இவைதவிரத் தேனூர் - ஐங்.55,57; விரான் இருப்பைஐங்.58; கழார் - ஐங்.61; தொண்டிப்பத்து – 171-180; கொற்கை – 185,188 ஆகிய பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. மூவேந்தர்களையும் குறுநில மன்னர்களையும் வள்ளல்களையும் சமத்துவப் பார்வையோடு ஐங்குறுநூறு பதிவு செய்துள்ளமையை இதன்வழி அறிய இயலும். ஐங்குறுநூற்றில் பதிவாகியுள்ள இவ்வரலாற்றுச் செய்திகளும் அகம் சார்ந்து பாடுதலும் முத்தொள்ளாயிரப் பாடுபொருளுக்குத்(தனித்தனியாகப் பாடுதற்குதோற்றுவாயாக இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
பகுப்பு முறையும்  வைப்புமுறையும்
  ஐங்குறுநூற்றின் வைப்பு முறை தேர்ந்த திட்டமிடலினூடாகப் பிறந்தது. திணைக்கு நூறு பாடல்கள் முறையே ஐந்நூறு பாடல்களும் ஒவ்வொரு திணைக்கும் பத்துப் பத்துப் பாடல்களாகப் பகுக்கப்பெற்றுள்ளன. மேலும் கருத்துச் செறிவுமிக்கதான தலைப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால் முத்;தொள்ளாயிரம் முழுமையாகக் கிடைக்கப்பெறாததால் பாடல் பகுப்பு முறை குறித்து அறிய இயலவில்லை.இருப்பினும் சேர,சோழ,பாண்டிய மரபினை விளக்க முற்பட்டுள்ளமையையும் தற்சமய வைப்பு முறையையும் கருத்திற்கொண்டு நோக்கும் பொழுது ஐங்குறுநூற்றினை ஒத்த பகுப்பு முறை பின்பற்றப்பெற்றிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
   முல்லைத் திணையில் உள்ள பத்துகள் அனைத்தும் நிகழ்ச்சித் தொடர்புடையனவாகும.; செவிலி கூற்றுப் பத்து,கிழவன் பருவம் பாராட்டுதல், விரவி உரைத்தல்,கார்ப்பருவத்தை உரைக்கின்ற புறவு,பாசறையில் உரைப்பன, பருவம் கண்டு கிழத்தி உரைப்பன,தோழி ஆற்றுவித்தல்,பாணன் தூதாக வருதல்,தலைவன் தேரில் வருதல்,வரவு சிறப்புற அமைதல் என்று முல்லைத்திணையின் ஒழுகலாற்றினை ஒழுங்குமுறையுடன் அமைத்திருப்பதனைக் காணலாம். முத்தொள்ளாயிரமும் வேந்தர்களின் பெருமையுரைத்தல்,பெண்டிரின் காதலுணர்வை வெளிப்படுத்துதல் என்கிற நிலைகளில் ஒழுங்குபடத் தொகுக்கப்பெற்றுள்ளது. ஆனால் படைப்பாக்கத்தின் பொழுது இத்தகைய புலமைத்துவச் சிந்தனை மேற்கொள்ளப்பெற்றதா?என்பது மேலாய்விற்குரியது.
யாப்பும் வனப்பும்
   கலித்தொகையும் பரிபாடலும் பழமரபைப் புதுப்பிக்கும் பொருட்டு எழுந்த போதிலும் ஐங்குறுநூறு ஏனைய சங்க இலக்கியங்களைப் போன்று அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் மூன்று அடிகளால் ஆன ஆசிரியப்பா வகையினைக் கொண்டு சிறப்பெய்தியுள்ளது. மூன்றடியினைச் சிற்றெல்லையாகக் கொண்டு பாடப்பெற்ற சங்க நூல் ஐங்குறுநூறு மட்டுமேயாகும். அதாவது யாப்பின் வடிவமுறையில் மாற்றத்தை()புதுமையைக் கொண்ட நூலாக ஐங்குறுநூற்றினைக் கருதலாம்.
தொல்காப்பியனார் அகவற்கு மூன்றடிச் சிற்றெல்லை வகுத்தார். எனினும் சங்க காலப் புலவர்கள் நான்கடிச் சிற்றெல்லையையே பின்பற்றியுள்ளனர். புறநானூற்றில் மூன்றடிகளில் அமைந்த பாடல் ஒன்று கூட இல்லை. குறுந்தொகை முதலியவற்றைத் தொகுத்தோர் அடி வரையறையையே உளங்கொண்டனர். அவர்கட்குக் கிடைத்த பாக்களில் மிகச் சிறிய பாக்கள் நான்கடிகளையே பெற்றிருந்தன. எனவே,குறுந்தொகையை முதலில் தொகுத்தனர். மூன்றடிகளில்அமைந்த பாக்கள் கிடைத்திருக்குமாயின் அவற்றையே முதலில் தொகுத்திருப்பர். அத்தொகுதியே குறுந்தொகை என்று பெயர்பெற்றிருக்கும். எனவே அக்காலத்தில் நான்கடிகளே சிற்றெல்லையாக அமைந்தமை விளங்கும். மேலும் 500 புலவர்கள் வாழ்;ந்த கால எல்லையில் குறிப்பிட்ட ஐவர் மட்டும் 3 அடிகளைக் கொண்டு பாடினர் என்பதும் பொருந்தாது. மேலும் அகப் பாடல்களை மட்டுமே மூன்றடிகளில் பாடினர் என்பதும் ஏற்புடைத்தன்று.இந்நூலில் இத்தகைய சிறுபாக்கள் 53 உள்ளன. (.தட்சிணாமூர்த்தி,2003:19-20)
ஆகவே அகம் பாடுதலில் குறைவான அடிகளைக் கொண்டும் செறிவான சொற்களைக் கொண்டும் சிறப்புற பாடப்பெற்ற நூலாக ஐங்குறுநூற்றினைக் கருதுவர். ஐங்குறுநூறு எண்வகை வனப்பிலும் சிறப்புப்பெற்றதாகும்.
தொடர்நிலைச் செய்யுள் குறுகிய செய்யுள்களாக இருத்தல் வேண்டும் என்பது முன்னதின்(அம்மை) கருத்து. அழகென்பது செவ்விய மதுரஞ்சேர்ந்த சீரிய கூரிய தீஞ்சொற்களையே தேர்ந்து செய்யுள் புனைவதால் உண்டாகும் தனிச்சிறப்பாகும். இவ்விருவகை வனப்பினுள் கலித்தொகை அடிநிமிர்ந்தோடலின் அம்மை என்னும் வனப்பைப் புறக்கணித்துவிட்டது. இனி இவ்வைங்குறுநூற்றுச் செய்யுள் ஐந்நூறுமே இவ்வம்மை என்னும் தலைசிறந்த வனப்பினையும் அழகு என்னும் வனப்பினையும் குறிக்கொண்டு புனையப்பட்டிருத்தலான்; இந்நூல் இவ்வகையான் ஏனைய நூல்களைக் காட்டினும் தனக்கென ஒருதனிச் சிறப்புடன் திகழ்வதைக் காணலாம்.    (பொ.வே.சோமசுந்தரனார்,1961:19-20)
ஆகவே,எண்வகை வனப்புகளுள் அம்மையும் அழகும் பெற்றுச் சிறப்புற விளங்குவது ஐங்குறுநூறு என்பது தெளிவு. முத்தொள்ளாயிரத்தின் பா அமைப்பானது வாசகரை மையமிட்டு யாக்கப்பெற்றுள்ளதோ என எண்ணத்தோன்றுகிறது. வெண்பா வடிவினைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி, மோனை,எதுகை திறம்பட அமையுமாறு யாத்திருப்பது முத்தொள்ளாயிரத்தின் கால வளர்ச்சியை எடுத்தியம்புகின்றது.
ஏற்றூர் தியானும் இகல்வெம்போர் வானவனும்
ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றின் ஒவ்வாரே
கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயாம்
ஆற்றலசால் வானவன் கண் (முத்.22)
இத்தகைய யாப்பமைப்பு ஐங்குறுநூற்றினை அடியொற்றியே அமைந்துள்ளது என்று கூறுவதைவிட ஐங்குறுநூறு அதன் காலக்கட்டத்தில் வெளிப்படுத்திய மாற்றுச் சிந்தனைப் போக்கை முத்தொள்ளாயிரமும் அதன் காலத்தில் வெளிப்படுத்தியுள்ளது எனலாம். ஐங்குறுநூற்றில் உள்ள பத்துகளின் அமைப்பு முறை பிற்காலத்தைய திருக்குறளுக்கும் பக்திப் பாசுரங்களுக்கும் அடித்தளமிட்டது என்பர். இதேபோன்று முத்தொள்ளாயிரம் பிற்காலச் சிற்றிலக்கியங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக உலா வகைமைக்கு முத்தொள்ளாயிரமே முன்னோடியாகும்.
வாழ்த்துப் பா
   ஐங்குறுநூறும் முத்தொள்ளாயிரமும் சிவபெருமானையே கடவுள் வாழ்த்துப் பொருண்மையாகக் கொண்டுள்ளன. இரு நூல்களும்மூல முதல்வன் சிவபெருமான்எனும் கருத்தினை முன்னம் படைத்த முதல்வன் (முத்.) மூவகையுலகு முகிழ்த்தன(ஐங்) என்று வலியுறுத்தியிருப்பதன்வழிக் காணலாம்.
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தினைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.அதாவது வகை,தொகைப் படுத்தப்பெற்ற பின்னர் கடவுள் வாழ்த்து ஒருசேர இயற்றப்பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்து இயற்றப்பெற்றதுபோல் முத்தொள்ளாயிரத்திற்கும் கடவுள் வாழ்த்து பிற்காலத்தில் இயற்றப்பெற்றதா()படைப்பின் பொழுதே இயற்றப்பெற்றதா என்பதை அறிய இயலவில்லை.
குறிப்புப்பொருளும் புலப்பாட்டுநெறியும்
 ஐங்குறுநூறு  உள்ளுறையால் சிறப்புப் பெற்றது என்பர். ஐங்குறுநூற்றின் பெரும்பாலான பாடல்கள் உள்ளுறையால் சிறப்புற்றுள்ளன.
தலைவி தோழி முதலியோர் தாம் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறத்தகாத செவ்வியிலே தெய்வம் ஒழிந்த திணைக்கருப்பொருள்களை வெளிப்படையாக வேறுபொருள்படத் தொடுத்து அத்தொடர் தாம் கருதிய பொருட்கு உவமம்போல அமைந்து அவ்வுவமத்திற்குப் பொருளாகத் தமது கருத்தினை நுண்ணறிவுடையோர் உணர்ந்துகொள்ளும்படி வியத்தகு முறையிற் சொல்லாடும் ஓருபாயமாம்                                            
                                                                                             (பொ.வே.சோமசுந்தரனார்,1961:21)
ஐங்குறுநூறும் முத்தொள்ளாயிரமும் பெரும்பாலும் இயற்கைப்பொருள்களை உவமையாகவும் உள்ளுறையாகவும் கொண்டு பாடியுள்ளன. இவ்எடுத்தாளுகையில் இவ்இரண்டு நூல்களும் வெவ்வேறு கருத்துப்புலப்பாட்டினைக் கொண்டமைகின்றன.
அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் - புள்ளினந்தங்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு(முத்.3)
எனும் பாடலில் சேரனின் இயற்கை வளம் கதைப் பின்னலாக்கி ஒரே பாடலில் அளிக்கப்பெற்றுள்ளது. ஆனால் ஐங்குறுநூறு நுண்ணிய இருவேறு பொருண்மைகளை உள்ளடக்கியமைந்துள்ளதை அறியலாம்.
     புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
     விசும்பாடு குறுகிற் றோன்று முரண்(ஐங்.17)
என்ற பாடலில் முதலிரு அடிகள் இயற்கை வளத்தைக் குறிப்பிடுவதோடு தலைவியின் துயர் பாடுகின்ற பிறிதொரு பொருளையும் கொண்டமைகின்றன. இதனை உள்ளுறை என்ற பொருளில் குறிப்பர். அகம் தொடர்பான முத்தொள்ளாயிரப் பாடல்கள் (சேரர் பாடல்கள்) ஒவ்வொன்றிலும் முதலில் மன்னனின் திறம் உரைத்துப் பிறகு பெண்ணின் காதலுணர்வு பேசப்பெற்றுள்ளதைக் காணலாம்.
வருக குடநாடன் வஞசிக்கோ மானென்
றருகல ரெல்லாம் அறியஒரு கலாம்
உண்டா யிருக்கவவ் வொண்டொடியாள் மற்றவனைக்
கண்டா ளொழிந்தாள் கலாம் (முத்.18)
அதாவது மன்னனை வாழ்;த்துவதினூடாகத் தமது காதலை வெளிப்படுத்துவதாகப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. இத்தன்மையை ஐங்குறுநூற்று மருதத் திணையின் வேட்கைப் பத்துப் பாடல்களில் காண இயலும்.
வாழி யாதன் வாழி யவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
வெனவேட் டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாண ரூரன் வாழ்க
பாணனும் வாழ்க வெனவேட் டேமே (ஐங்.1)
இத்தன்மையை நோக்கும் பொழுது ஐங்குறுநூற்றின் புலப்பாட்டுத்திறனை உள்வாங்கிக் கொண்டு காலத்திற்கேற்ப முத்தொள்ளாயிரம் யாக்கப்பெற்றுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தகைய புதுமைத் தன்மைகள் முத்தொள்ளாயிரத்தில் பல காணக்கிடைக்கின்றன (விவரம்,இணைப்பு-1). அவற்றைத் தவிரப் பழைய மரபினைப் புதுப்பித்துக் கொண்டுள்ள மாற்றுச் சிந்தனைகளையும் முத்தொள்ளாயிரப் பாடல்களில் காணமுடிகின்றது.
பசலை
   பசலை என்பது தலைவனின் பிரிவுத் துயரால் தலைவிக்கு நேர்கின்ற ஒருவகையான நோய். இதனைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். அவ்வகையில் ஐங்குறுநூற்றில் 28,29,36,101,141,145,200,231,459 ஆகிய பாடல்கள் பசலையைக் குறித்து நிற்கின்றன. பழம் மரபிற்கு மாறாக, முத்தொள்ளாயிரத் தலைவியானவள் பசலையை மகிழ்வுடன் ஏற்கின்றவளாகக் காணப்பெறுகின்றாள்.
வாமான்றேர்க் கோதையை மான்றேர்மேற் கண்டவர்
மாமையே யன்றோ இழப்பதுமாமையிற்
பன்னூறு கோடி பழுதோஎன் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு (முத்.12)
ஐங்குறுநூற்றுப் பாடல்கள் தலைவியின் ஆழ்மன வருத்தத்தையும் அதன்வழி உடலமைப்பினையும் விளக்கிச் செல்கின்றன. “பசலையை நகுக யாமே”(ஐங்.200) என்கிற ஓரிடத்தில் மட்டும் பசலையின் நீக்கத்தினை எள்ளி நகையாடுவதாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது. ஆனால் முத்தொள்ளாயிரத்தில் தனது மேனி பசலையால் மெலியவில்லை மாறாக,அழகு பெறுகின்றது என்றுரைக்கின்ற மாற்றுப் போக்கினைக் காணமுடிகின்றது. இத்தகைய வெளிப்பாடும் காதலுணர்வின் பாற்பட்டதாகக் கருதினாலும் அகப்பொருண்மை காலத்திற்கேற்பப் புத்தாக்கம் பெற்று வந்துள்ளது என்பது மனங்கொள்ளத்தக்கது.

அலர் 
 அலர் என்பது பலர் அறிந்து கூறும் பழிமொழி என்றுரைப்பர். தலைவன் தலைவியின் காதல் நிகழ்வு ஊரார்க்குத் தெரியாமல் காப்பதில் தொடர்புடைய இருவரும் தோழியும் கவனமாய் இருந்துள்ளனர். அலர் தூற்றப்பெறுதலுக்கு அஞ்சி நடந்துள்ளனர.; இத்தகைய பதிவுகள் ஐங்குறுநூற்றில் காணக்கிடக்கின்றன (ஐங்.71,75,77,132,143,164,483). முத்தொள்ளாயிரத்திலும் அலர் பற்றிய பதிவு ஓரிடத்தில் காணப்பெறுகின்றது.
கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணி
லடைத்தா டனிக்கதவம் அன்னையடைக்குமேல்
ஆயிழையாய் என்னை யவன்மே லெடுத்துரைப்பார்
வாயு மடைக்குமோ தான்(முத்.14)
என்று ஊர்வாயை அடைக்க இயலுமா? என்று வெளிப்படையாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளதுகளவு வெளிப்பட்டதன் காரணமாகத் தாயானவள் தலைவியை இற்செறிப்பு செய்வதாகச் சங்க இலக்கியப் பதிவுகள் காணப்பெறுகின்றன. அதே தன்மையில் முத்தொள்ளாயிரப் பாடல்கள் அமைந்திருந்த பொழுதும்ஊரார் வாயுமடைக்குமோஎன்று தலைவி தாயை நோக்கி எள்ளல் தன்மையுடன் வினவியிருப்பது பழமையிலிருந்து விடுபடுகின்ற முயற்சியாகத் தெரிகின்றது.
வெறியாட்டு
      தலைவியின் உடல் மெலிவினைக் கண்ணுற்ற செவிலி, ஏதோ அணங்கினால் அரற்றப்பெற்றுள்ளதாகக் கருதி வேலனிடம் வேண்டுகின்ற நிகழ்வே வெறியாட்டு ஆகும்.
உடல்நலங் குன்றி மேனி வேறுபடும் இளமகளிர் பொருட்டு வெறியாடுமிடத்து அவர்களை நீராட்டி ஒப்பனைசெய்து வெறியயர்களத்தே நிறுத்தி வேலன் முருகனை வழிபட்டுப் பல்வகை இயங்கள் இயம்ப,பறை முழங்க,முருகனது வேலைக் கையிலேந்திக் களத்தில் ஆடுவான். அக்காலை அங்கே நிற்கும் மகளிர் சிலர் உடல் நடுங்கி மருண்டு ஆடுவதும் செய்வர். அதனை வெறியுறு நுடக்கம் என்பர்.    (ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை,1957:576)
ஐங்குறுநூற்றில் வெறியாட்டு குறித்து வெகு சிறப்பாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது.வெறிப்பத்து எனும் தனியொரு பத்து அமைந்திருப்பதே இதற்குச் சான்றாகும். அவ்வகையில் ஐங்குறுநூற்றின் 28,210,241-250 ஆகிய பாடல்கள் வெறியாட்டினை உணர்த்தி நிற்கின்றன. வெறியாடுதலையும் வெறியாடுதலுக்குரிய பொருள்களையும் வேலனையும் ஐங்குறுநூற்றுப் பாடல்கள் சிறப்புற இயம்புகின்றன. இத்தன்மையை முத்தொள்ளாயிரத்திலும் காண இயலுகிறது.
காராட் டுதிரந்தூஉ யன்னை களனிழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோபோராட்டு
வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென்
னெஞ்சங் களங்கொண்ட நோய் (முத்.20)
கரிய ஆட்டின் இரத்தத்தையும் பொரியையும் தூவி,வெறியாட்டுக்குரிய களம் அமைத்துத் தலைவியை நீராட்டி நீங்கு என்று உரைக்கின்ற புதுமைப் போக்கினை முத்தொள்ளாயிரம் பதிவு செய்கின்றது. இவைதவிர,மன்னனைப் பார்ப்பதற்குத் தலைவி,தாய் இடையே நிகழ்கின்ற கதவு நிகழ்ச்சி(முத்.10)காதல் நோயைத் தீர்ப்பதற்கு ஊரார் உதவ வேண்டும் எனல்(முத்.13),கனவில் மெய்தொட்டுப் பயிறல்(முத்.15),தலைவி தலைவனைப் பார்க்கச் செல்லுதல்(முத்.16),மனதினைத் தூது விடல்(முத்.17),பெண்களின் நலம் கவர்பவன் எனல்(முத்.19) முதலான செய்திகள் ஐங்குறுநூற்றில் காணவியலாதவையாகும். முத்தொள்ளாயிரத்தில் காணக்கிடைப்பனவாகும். இதன்வழி காலச்சூழலுக்கேற்பப் பழஞ்செய்திகள் புதுப்பிக்கப்பெற்று முத்தொள்ளாயிரத்தில் உரைக்கப் பெற்றுள்ளமையை அறியமுடிகின்றது.


தொகுப்புரை
             ஐங்குறுநூறும் முத்தொள்ளாயிரமும் எழுந்த காலக்கட்டங்களில் அவற்றிற்கென மாற்றுச் சிந்தனைப் போக்கினை வெளிப்படுத்த முயன்றுள்ளன.இதனை நூலமைப்பும் கருத்துப்புலப்பாட்டு நெறியும் உணர்த்துகின்றன.
             படைப்பாக்கக் காலத்திலும் தொகுப்பாக்கக் காலத்திலும் சமூக அரசியல் சார்ந்த பின்னணி இவ்விரு நூல்களுக்கும் இருப்பதை அறிய இயலுகிறது
             ஐங்குறுநூற்றின் கருத்துப் புலப்பாட்டுத் திறத்தை உள்வாங்கிக் கொண்டு தீவிரமான வாசிப்புப் பின்னணியில் முத்தொள்ளாயிரம் இயற்றப்பெற்றிருக்கலாம் என்கிற கருத்து சமைக்கப்பெற்றுள்ளது.
             ஐங்குறுநூற்றில் பதிவாகியுள்ள காதல் தொடர்பான நிகழ்வுகளுள் சில முத்தொள்ளாயிரத்தில் மாற்றுச் சிந்தனையுடன் பதிவாகியுள்ளமையை அறிய இயலுகின்றது.
             ஐங்குறுநூற்றிலிருந்து முத்தொள்ளாயிரம் சிற்சில இடங்களில்(சிவன்,இந்திரன்,ஆறுமுகம் எனப் புராணம் சுட்டுதல்,பாவகைமை,அதீத அன்புரைத்தலில் உள்ள வெளிப்பாடு) முற்றிலும் மாறுபட்டு அமைந்துள்ளமை நோக்குதற்குரியன.
துணைநூல்கள்
1.ஐங்குறுநூறு, 1920(.), .வே.சாமிநாதையர்(.),கணேசர் அச்சுக்கூடம்,சென்னை.
2.ஐங்குறுநூறு(மருதம்,நெய்தல்),1957,ஒளவைசு.துரைசாமிப்பிள்ளை(.),அண்ணாமலைப்பல்கலைக்கழகப்         
 பதிப்பகம்,சிதம்பரம்.
3.ஐங்குறுநூறு(குறிஞ்சி,பாலை),1957,ஒளவைசு.துரைசாமிப்பிள்ளை(.),அண்ணாமலைப்பல்கலைக்கழகப்         
 பதிப்பகம்,சிதம்பரம்.
4.ஐங்குறுநூறு(முல்லை),1958,ஒளவைசு.துரைசாமிப்பிள்ளை(.),அண்ணாமலைப்பல்கலைக்கழகப்         
 பதிப்பகம்,சிதம்பரம்.
5.முத்தொள்ளாயிரம்,2010,கதிர்முருகு,சாரதா பதிப்பகம்,சென்னை.
6.தமிழியற் சிந்தனைகள்,2003,.தட்சிணாமூர்த்தி
                             இணைப்பு – 1
முத்தொள்ளாயிரத்தில் காணப்பெறுகின்ற புதுமைச் செய்திகளாகக் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
             தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே(முத்.10)
             …….நிரைவளையர்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார்
செங்கோலன் அல்லன் என(முத்.11)
             …..மாமையிற்
பன்னூறு கோடி பழுதோஎன் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு(முத்.12)
             ஊரிரே யென்னை யுயக்கொண்மின்(முத்.13)
             என்னை யவன்மே லெடுத்துரைப்பார்
வாயு மடைக்குமோ தான்(முத்.14)
             கணவினுட் டைவந்தான்(முத்.15)
             பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல(16)
             காணிய சென்றவென் நெஞ்சு(முத்.17)
             நெஞ்சம் நிறையழித்த கள்வன்(முத்.19)
             காராட் டுதிரந்தூஉ யன்னை களனிழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ(முத்.20)
             ஏற்றூர் தியானும் இகல்வெம்போர் வானவனும்(முத்.22)
             இந்திரன் என்னின் இரண்டேகண் ஏறூர்ந்த
அந்தரத்தான் என்னிற் பிறையில்லை(முத்.23)
Share
Posted in: Posted on: வெள்ளி, 4 மார்ச், 2016

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.