செவ்வாய், 2 அக்டோபர், 2018

பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல்

எழுத்தாணி  /  at  அக்டோபர் 02, 2018  /  No comments


பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல்.


தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்திற்குப் பின்னர் நான் எழுதுகின்ற விமர்சனம் அல்லது ஒரு படைப்பு மீதான  மதிப்பீடுதான் இந்தப் பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். பருத்திவீரன் படத்திற்குப் பிறகு தமிழ்ச் சினிமா ஒரு மாற்றுச் சிந்தனையை இடைக்கொண்டு பயணித்து வந்திருப்பதைப் பலரும் அறியவியலும். சுப்பிரமணியபுரம், மைனா, கழுகு, நெடுஞ்சாலை, ஆரண்யகாண்டம், மதுபானக்கடை, தென்மேற்குப் பருவக்காற்று, வெண்ணிலா கபடிக் குழு, தங்கமீன்கள், ரேனிகுண்டா, பரதேசி, மூடர்கூடம், குக்கூ, ஜோக்கர், அட்டகத்தி, பீட்சா, டிமான்டி காலனி, மெட்ராஸ், அருவி, மேற்குத் தொடர்ச்சி மலை என்று அடுக்கிச் செல்லும் அளவிற்கு ஒரு மாற்றுச் சிந்தனையைத் தமிழ்ச் சினிமா தன்னுள் தகவமைத்துக் கொண்டு வந்துள்ளது.
“பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். மேல ஒரு கோடு” விடுபட்டுப் போன கதைக்களத்தின் மிச்ச சொச்சம். ஆம் இது சாதிவெறி பிடித்தோரைத் தோலுரிக்கின்ற கதை. திருாநல்வேலி பகுதியைக் கதைக்களமாகக் கொண்ட இக்கதையின் டைட்டில் கார்டு இருட்டிலிருந்து வெளிச்சம், வெளிச்சத்திலிருந்து இருள் என்கிற முறையில் அமைத்துக்கொண்டு வறட்சியான நிலப்பரப்பைக் காட்டியபடி துவங்குகிறது. ஒடுக்கப்பட்டோர் குளிக்கும் சிறு குட்டையில் உயர்த்தப்பட்டோர் ஒன்னுக்கடிப்பதாக அடுத்த காட்சி,  கருப்பி என்கிற நாய் கொல்லப்படுவதாக மூன்றாவது காட்சி. இந்த மூன்று காட்சிக்குள் படத்தின் வேகம் கட்டுப்பாடோடும் எச்சரிக்கை மணியை அடித்தபடியும் தாறுமாறாகப் பயணிக்கிறது.
சங்ககிரி ராச்குமார் இயக்கிய வெங்காயம் எனும் திரைப்படம் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தது. அதில் தனது ஊர் மக்களையே கதாப்பாத்தரங்களாக்கி நடிக்க வைத்திருப்பார். ப.பே.பி.ஏ.பி.எல். கதையிலும் முதன்மைக் கதாப்பாத்திரங்கள் சிலரைத் தவிர அனைவரும் ஒருவூர் மக்களே. கல்லூரி சூழலை வைத்துச் சாதியம் பேசியுள்ளார். படிக்காத பெரியோர்கள் சாதியக் கொடி வைத்துள்ளனர். ஆனால் படித்த இளைஞர்களே அந்தக் கொடியை உயர்த்திப் பிடிக்கின்றனர் என்கிற இயல்பைச் சுட்ட இப்படி தெரிவு செய்துள்ளார் போலும்.
அவனுங்களுக்கிட்ட பணமும் வசதியும் இருக்குடா நமக்கிட்ட வாயும் வயிறும்தானடா இருக்கு என்கிற முதல் காட்சி வசனத்தைக் கேட்டவுடன் இது தலித்திய சிந்தனை என்று முடிவுகட்ட தோன்றும். ஆனால் கதையின் பல இடங்களில் இருதரப்பு நியாய அநியாய தர்மங்கள் பேசப்பட்டுள்ளன. அதுவும் தருக்கமுறைப்படி பேசப்பட்டுள்ளன. பரியின் உண்மையான அப்பாவை அறிமுகப்படுத்திய காட்சி தமிழ்ச் சினிமாவில் புதியது. ஆனால் இன்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் போன்ற பகுதிகளில் தெருக்கூத்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலும் ஆடவர்களே பெண் வேடமிட்டு நிகழ்த்துவர். பரியின் அப்பா அத்தகைய நிகழ்த்துக் கலைஞர். அக்கலைஞனை அவமானப்படுத்துகின்ற ஒரு காட்சியில் பார்வையாளர்களைக் கண்கலங்க வைத்து பரிசுத்தமான நேயத்தை உண்டாக்கி இயக்குனர் வெற்றியடைகின்றார். ஆனால் அக்காட்சியில் உயர்த்தப்பட்டோர் அவ்வளவு வன்மம் மிக்கவர்களாகக் காட்டப்பட வேண்டுமா? இஸ்லாமியர்களைத் தீவரவாதிகளாகக் காட்சிப்படுத்தப்படுவதைப் போன்று இக்காட்சி இருந்தது. நட்ட நடுரோட்டில், பகைவனின் அப்பாவை இவ்வாறு வேட்டியை அவிழ்த்து ஓடவிட்டிருப்பதை எந்த நிலையில் நின்று பார்ப்பது? இதேபோன்று ஒன்னுக்கடிக்கின்ற காட்சிகளையும் வசனங்களையும் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். இது சாதிய வன்மத்தின் வெளிப்பாட்டுக்கான உத்தி என்றாலும் ஒடுக்கப்பட்டோரின் மீதான தொடர் ஒன்னுக்கு  அடித்தல் ஒருவித கோபக்கனலை உண்டு பண்ணுகிறது.
 படிச்சு என்னவாகப் போற என்று பிரின்சுபால் கேக்க, அதற்குப் பரி டாக்டர் ஆகப்போறேன்னு சொல்வார். தம்பி Law காலேஜ்ல  டாக்டர் ஆகப் போறேனு சொல்லக் கூடாது அட்வகேட் னு சொல்லனும் என்பார். சார் நான் டாக்டர்னு சொன்னது ஊசி போடுறவர இல்ல டாக்டர் அம்பேத்கர் ஆகப் போறேனு சொல்வார். திரையரங்கமே கைதட்டுகிறது. அதே கைதட்டல்கள் பரி மீது ஒன்னுக்கடிக்கும் போதும், லேடிஸ் டாய்லெட்டுக்குள் தள்ளப்படும் போதும் அடங்கி ஒடுங்கிக்கொள்கிறது. இ்ந்தச் சப்த நிசப்தங்களை நோக்கும் பொழுது சாதிய ஒளி பார்வையாளர்களை நெருக்கமாக்கிக் கொண்டுள்ளதை அறிய முடிகின்றது. அது நிஜத்தைவிட பயமுறுத்துவதாய் உள்ளது.
            கொளரவக்கொலைகள் தொடர்ந்து ஒரு கிழவனால் நிகழ்த்தப்படுவதை மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர். கொடூரக்கொலைகளையும் கொளரவக் கொலைகளையும் செய்வோர் மிகச் சாதாரணமாக நடமாடுவதைச் சுட்டியிருப்பார். ஆனந்தி நாயகி, கதிர் நாயகன் இருவருக்கம் சினிமாவில் ஒரு இடம் உண்டு. தேர்ந்த நடிப்பு. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த கல்லூரி எனும் படத்தைச் சில இடங்கள் நினைவூட்டிச் சென்றாலும் பிற்பகுதிக் கதையை ஒடுக்கப்பட்டோரின் அழுகுரலாகப் பதிவு செய்து இறுதியில் தீர்வு தராமல் நம்மைச் சாதியக் கட்டவிழ்ப்போடு இருக்கையைவிட்டுச் செல்லச் செய்கிறார்.
ஒடுக்கப்பட்டவனின் கோபத்தை நீல வண்ணமாக்கி எழுவதாக வடிவமைத்திருப்பார். அந்த இடங்களில் தொல்.திருமாவளவனின் கட்சிக் கொடியும் ரஞ்சித்தின் நீலம் அமைப்பும் பார்வையார் மத்தியில் வந்து செல்வதைத் தவிர்க்கவியலவில்லை. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு புகுந்து விளையாண்டுள்ளது. கருப்பி என்கிற நாய்க்கு நடக்கும் இழவுப் பாடலுக்குச் சந்தோஷ் நாராயணன் இசைக்கோப்பு புதுரகம்.  கலை இயக்குனரும் தேவையுணர்ந்து வேலை செய்துள்ளார்.
சாதியத்திற்கு எதிரான சிந்தனைகள் இன்றைய எழுத்தாளர்கள் மத்தியில் விரவி வந்தாலும் தமிழ்ச் சூழலில் அதற்கான வாசகர் வட்டமும் ஆசிரியருக்கான அங்கீகாரமும் இன்னும் கிடைத்தபாடில்லை. இந்த நேரத்தில் அதிக வாசகர்கள் அல்லது பார்வையாளர்களைக் கொண்ட தமிழ்ச்சினிமாவில் இத்தகைய சாதியப் செறிவுடைய ப.பே.பி.ஏ.பி.எல்.கதை மிகுந்த கவனத்திற்குரியது.
   

Share
Posted in: Posted on: செவ்வாய், 2 அக்டோபர், 2018

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.