வியாழன், 3 மார்ச், 2016

உரையாசிரியர்களின் எடுத்தாளுகையில் தொல்காப்பியம் - ஐங்குறுநூறு

Ulagasivan Sivan  /  at  மார்ச் 03, 2016  /  No comments


                                                                               
      இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளில் ஐங்குறுநூற்றுப் பாடல்கள் எடுத்தாளப்பெற்றுள்ள முறையியலை விளக்குவது இவ்ஆய்வுரையின் நோக்கமாகும்.
அகத்திணையியல்-ஐங்குறுநூறு
   தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும்; ஐங்குநுறூற்றுப் பாடல்களைப் பரவலாகப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை இனங்கண்டு விளக்குவது ஆய்வின் மிக முக்கிய நோக்கமாகும். இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் பாடல்களைச் சான்று காட்டுவதுடன் மட்டுமல்லாது பாடல்களுக்கான சிறுசிறு விளக்கங்களையும் அளித்துச் சென்றுள்ளனர். இம்முயற்சி ஐங்குறுநூற்று உரைமரபில் மிக முக்கியமானதாகும். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இளம்பூரணர் 78 இடங்களிலும் நச்சினார்;க்கினியர் 178 இடங்களிலும் ஐங்குறுநூற்றுப் பாடல்களை எடுத்தாண்டுள்ளனர். அகத்திணையியலில் இளம்பூரணர் மொத்தம் 19 இடங்களில் (ஐங்.361,391,372,375,381,364,387,388, 384,385,312,397,140, 480,393,478,477,322,369) சான்று காட்டியுள்ளார். இவற்றுள் 15 பாடல்கள் பாலைத்திணைக்குரியன. மூன்று பாடல்கள் முல்லைத்திணைக்குரியன. ஒரு பாடல் நெய்தல் திணைக்குரியது ஆக, பாலை,முல்லை,நெய்தல் ஆகிய திணைப் பாடல்கள் இளம்பூரணரால் சான்று காட்டப்பெற்றுள்ளன.
  இளம்பூரணர் 
 இளம்பூரணர் தொல்காப்பிய நூற்பாவை முன்னிறுத்தியே ஐங்குறுநூற்றுப் பாடல்களைச் சான்று காட்டியுள்ளார். அவ்வாறு சான்றுகாட்டுகையில் ஐங்குறுநூற்றுப் பாடலுக்கான கூற்றினையும் வரைந்து சென்றுள்ளமையைக் காண இயலுகின்றது.
(சான்று)
  இது சுரத்திடை வினாஅயதற்குச் செய்யுள்(389)
  இது விலக்கிற்று(364)
  இது விடுத்தற்கண் வந்தது(388)
  இது பாணர் கூறியது(480)
மேற்கண்டவாறு ஒற்றை அடியில் பாடலுக்கான சூழல் விளக்கம் இளம்பூரணரால் அளிக்கப் பெற்றுள்ளது. 369 ஆம் பாடலுக்கு மட்டும் சற்று விரிவாக விளக்க நிலையில் அளித்துள்ளார். அவ்விளக்கம் வருமாறு:        
            இஃது ஊடற் பொருண்மைத்தேனும் வேனிற்காலத்து நிகழும் குயிற் குரலை                    
            உவமித்தலிற் பாலைத் திணையாயிற்று. குரவம்-குராமரம்(369) 
மேற்சுட்டப்பெற்ற விளக்கமும் நூற்பா தெளிவினை முன்னிறுத்தியதே என்றாலும் அருஞ்சொற் விளக்கமும் பாடலின் உட்கருத்தும் குறிப்பிடப் பெற்றிருப்பதால் ஏனைய விளக்குமுறையிலிருந்து 369 ஆம் பாடல் மட்டும் வேறுபட்டுள்ளது எனக் குறிப்பிடலாம்.
நச்சினார்க்கினியர்
  நச்சினார்க்கினியர் அகத்திணையியலில்  மொத்தம் 65 இடங்களில் ஐங்குறுநூற்றுப் பாடல்களைச் சான்று காட்டியுள்ளார். இப்பாடல்களுக்குப் பெரும்பாலும் நச்சரால் விளக்கம் அளிக்கப் பெற்றுள்ளது. அதாவது தொல்காப்பிய நூற்பா, ஐங்குறுநூற்றுப் பாடல், பாடலுக்கான விளக்கம் என்கிற முறையியல் பின்பற்றப் பெற்றுள்ளது. அவ்வகையில் நச்சரின் இத்தகைய விளக்க முயற்சி ஐங்குறுநூற்று உரை மரபில் முக்கியத்துவம் பெறுகிறது. உ.வே.சா. பதிப்பில் பாடலுக்கான கூற்று விளக்கமாகப் பாடலினடியில் கருத்துரையொன்று இடம் பெற்றுள்ளமையை நோக்கும் பொழுது கூற்று வரைதல் எனும் பாரம்பரியம் ஐங்குறுநூற்று உரை மரபில் தொடர்ந்தியங்கியுள்ளது என்பதை அறிய இயலுகிறது(இவ்விளக்கத்தினைப் பின்வந்தோர் துறை, துறை விளக்கம் என விரித்துரைத்துள்ளனர்).
   உ.வே.சா.பதிப்பின் கருத்துரையானது நச்சினார்க்கினியரின் சிறுவிளக்கப் பகுதியுடன் பெரிதும் ஒத்துள்ளமையை அறிய முடிகிறது. சிற்சில இடங்களில் பொருண்மை மாறுபடாமல் சொற்றொடற் மட்டும் வேறுபட்டுள்ளமையைக் காணவியலுகிறறது. அவை வருமாறு:
         நச்சர்                    உ.வே.சா.பதிப்பு
       தோழிக்குக் கூறியது(183)     -    மாலைக்குச் சொல்லியது
       தலைவி கூறியது(141)       -    தோழிக்குச் சொல்லியது
நச்சினார்க்கினியர் இளம்பூரணரைக் காட்டிலும் சற்று விரிவாகவே சிறுவிளக்கப் பகுதியை அளித்துள்ளார்.
    முரம்பு கண்ணுடையத்……… எனத் துவங்கும் 449 ஆவது பாடலுக்குக் கீழ்வருமாறு விளக்கமளித்துள்ளார்.
        இது வேந்தன் திறைகொண்டு மீள்வுழித் தானுஞ் சமைந்த தேரை அழைத்துக்கண்டு
        திண்ணிதின் மாண்டன்று தேரெனப் பாகனொடு கூறியவழி அவ்வேந்தன் திறைவாங்காது
        வினைமேற் சென்றானாகப் பாகனை நோக்கிக் கூறியது.
                                         (தொல்.அகத்.ப.250)
சிறுவிளக்கமளித்தலின் இடையே அருஞ்சொற்பொருள் சுட்டுகின்ற முறையியலை நச்சர் ஓரிடத்தில் பினபற்றியுள்ளார்.
    நாடொறுங் கலுழு…. எனத் துவங்கும் பாடலுக்கு,
            இது தீவினையை வெகுண்டு புலம்பியவாறு காண்க. பால் - பழவினை
இதேபோன்று
    முல்லை நாறுங் கூந்தல்….. எனத் துவங்கும் 446 ஆவது பாடலுக்கு,
        இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் பருவவரவின்கண் உருவு வெளிப்பட்டுழிப்
        புலம்பியது. உதவி யென்றலின் வேந்தற் குற்றுழி யாயிற்று
என்று பாடலின் பொருள் தெளிவுறும்படியான விளக்கத்தினை நச்சர் சிறுவிளக்கப் பகுதியில் அளித்துள்ளார். இத்தன்மையையும் பிற இலக்கண உiயாசிரியரியர்களிலிருந்து நச்சர் வேறுபடக்கூடிய இடமாகக் குறிப்பிடலாம்.
    தொல்காப்பிய நூற்பாவிற்கே நச்சரும் முதன்மை அளித்திருந்தாலும்; சான்றுப் பாடல்களுக்கான விளக்கமளித்தல் எனும் நிலையில் நச்சர் முழுவதுமாக மாறுபட்டுள்ளார்.
பாடவேறுபாடுகள்
    உரை(அ)சிறுவிளக்கம்  என்பது உரையாசிரியர்களை மையமிட்டதாகும். காலத்திற்கேற்ப வெவ்வேறு விளக்கங்களைக் கொண்டிருக்கக்கூடியவை. அதாவது வெவ்வேறு கலைச்சொற்களைக் கொண்டு எழுதப்பெறுபவை. ஆனால் மூலபாடம் என்பது தனியொரு படைப்பாளனால் முதன்முதல் சமைக்கப் பெற்றது. அதனை மாற்றியமைப்பதை அறமில் செயலாகக் கருதப் பெற்று வருகின்றது. ஆனால் பண்;டைக் கல்வி முறையாலும் சமூகச் சூழல்களாலும் மூலபாட வேறுபாடுகள் பரவலாகத் தோன்றியுள்ளன. அவ்வகையில் இளம்பூரணர் எடுத்தாண்டுள்ள ஐங்குறுநூற்றுப் பாடல்களுக்கும் நச்சர் எடுத்தாண்டுள்ள பாடல்களுக்கும் இடையே பாடவேறுபாடுகள் காணப்பெறுகின்றன. இதேபோன்று நச்சர் எடுத்தாண்டுள்ள ஐங்குறுநூற்றுப் பாடத்திற்கும் உ.வே.சா.பதிப்பின் பாடத்திற்கும் இடையே வேறுபாடுகள் பெரும்பான்மையாகக் காணப்பெறுகின்றன. இவற்றுள் இளம்பூரணர் பாடமும் உ.வே.சா.பதிப்பின் பாடமும் பெரிதும் ஒத்துள்ளன.


தொகுப்புரை
தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் 19 இடங்களிலும் நச்சர்; 65 இடங்களிலும் ஐங்குறுநூற்றுப் பாடல்களை எடுத்தாண்டுள்ளனர்
இளம்பூரணர் தொல்காப்பிய நூற்பாவிற்கு முதன்மையளிக்கும் வகையில் ஐங்குறுநூற்றுப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்.நச்சினார்க்கினியரும் தொல்காப்பிய நூற்பாவிற்கு முதன்மையளித்திருந்தாலும் ஐங்குநுறூற்றுப் பாடல்களுக்குச் சிறுவிளக்கம் அளித்தலையும் உரைப்பணியாகக் கொண்டுள்ளார்
இளம்பூரணர் பாடத்திற்கும்; உ.வே.சா. பதிப்பின் பாடத்திற்கும் இடையே வேறுபாடுகள் பெரும்பான்மையாக இல்லை.
இளம்பபூரணர் பாடம், உ.வே.சா.பதிப்பின் பாடம் ஆகியவற்றிலிருந்து நச்சர் பாடம் வேறுபட்டுள்ளது.

Share
Posted in: Posted on: வியாழன், 3 மார்ச், 2016

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.