வெள்ளி, 7 ஏப்ரல், 2017

ஜோக்கர் – தேசிய விருதும் ஜனாதிபதியும்

Ulagasivan Sivan  /  at  ஏப்ரல் 07, 2017  /  No comments

  ஜோக்கர் – தேசிய விருதும் ஜனாதிபதியும்

2016 ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான  தேசிய விருதை ஜோக்கர் பெற்றுள்ளது. இந்த தருணத்தில் இப்படம் குறித்து சில கருத்தாடல்களை நிகழ்த்துவது தேவையாகிறது. சொல்லப்போனால் கடமையாகிறது. இது விமர்சனம் அல்ல. படம் பார்த்து முடித்த நாளிலிருந்தே அனைவரையும் குறிப்பாக இளைய தலைமுறைகளைப் பார்க்கச் சொல்லி வருகிறேன். அதன் நீட்சியாகவே இப்பொழுது இந்தப் பதிவை இடுகிறேன்.
ஜோக்கரின் குரல் ஒரு சாமானியனுடையது. கையாளாகாத தன்மையின் உச்சத்தில் பிறக்கிறான் ஜோக்கர் ஜனாதிபதியாக. “ஓட்டுப்போட்டு பதவியில் அமர்த்த உரிமை இருக்கிறது. தவறு செய்தால் பதவியைவிட்டு நீக்க நமக்கு உரிமையில்லையா“ என்கிற கேள்வியில் பிறக்கிறான் ஜனாதிபதி. அநீதியைக் கண்டு எவனொருவன் ஆத்திரம் கொள்கிறானோ அவனும் என் தோழன் என்பது சே யின் பேச்சு. இக்கருவே விரிவடைந்து மன்னர் மன்னன் – பொன்னூஞ்சல் – இசை எனும் கதாப்பாத்திரங்களில் உயிர்ப்பெறுகின்றன.
இந்தச் சமூகத்தின் மீது கோபம் கொள்ளுகின்ற நாமனைவரும் ஜனாதிபதியாக மாறித்தான் ஆக வேண்டும். இல்லையேல் இந்தச் சமூகம் நம்மை ஜோக்கராகத்தான் பார்க்கும்.
கழிப்பறையைப் பற்றிய படம் என்று படம் பார்க்கும் முன்னால் சில அறிவு ஜீவிகள் அள்ளித்தெளித்துக் கொண்டிருந்தனர். படத்தின் முதல் காட்சியிலிருந்தே புரியத் தொடங்கின. கண்டிப்பாக இது வேற தளத்துப்(லெவல்) படம் என்று. துடைப்பம் விற்றுக்கொண்டு இரண்டு வியாபாரிகள் மிதிவண்டியை மிதித்து வருகின்றனர். சாலையின் இருபுறங்களிலும் சிறுவர்கள் மலம் கழித்துக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது வியாபாரிகளின் கூவல் துடைப்பம் என்பது தொடைப்போம் தொடைப்போம் என்பதாக மாறுகிறது. இயக்குநர் ராஜிமுருகன் வந்து செல்கிறார். இதுதான் முதல்காட்சி. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வோம் எனும் டியுசன் காட்சியில் குடிப்பது, சாக்கடை ஓடுவது காட்சியாக வருகின்றன. மரம் நடுவோம் மண் வளம் காப்போம் வசனத்தில் குழாய்த்தண்ணீரில் மண் கலந்து வருவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுமாதிரி ஏராளமான படிமங்களையும் காட்சிப் பின்னணிகளையும் வேறு படத்திற்கு என்று ஒதுக்கிக் கொள்ளாமல் இந்தப் படத்திற்காகவே செதுக்கிக் கொண்டே சென்றுள்ளார் இயக்குநர்.ஷான் ரோல்டனின் இசை தேசியக்கொடியை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தது. அது ஏன் என்பது படத்தின் ஓட்டத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. மன்னர் மன்னன் முதல்காட்சியில் குளித்துக் கொண்டிருக்கின்ற போது கலை இயக்குநர் சதீஸ்குமாரை உங்களால் பாராட்டாமல் இருக்க முடியாது அவ்வளவு கவனம். சந்து பொந்துகளுக்கும் புகுந்து வரும் செழியனின் ஒளிப்பதிவு படத்தின் பலம்.
  சரி படத்திற்குள் சற்றுப் போகலாம், காந்தி ஒரு கண்ணுனா பகத்சிங் இன்னொரு கண்ணு என்று தேசத்தின் அடையாளம் ஒற்றை வசனத்தில் முடிந்து விடுகிறது. எத்தனையோ போராட்ட முறைகளையும் எதற்கெல்லாம் போராடலாம் என்பதையும் எல்லாவற்றிற்கும் மேலாக எதற்கு போராட வேண்டும் என்பதையும் மிகத் துணிச்சலாக கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாமல் எடுத்துரைக்கிறது. ஆளுக்கொரு நீதி ஆட்டுக்கொரு நீதி காட்சிகளில் நீதியைக் கொஞ்சம் தலைகாட்ட வைத்து உசேன் போல்ட்டை (ஆட்டின் பெயர்) நடக்க வைத்து விடுகிறார்.
படத்தின் இறுதிக்காட்சி பொன்னூஞ்சல் (மு,ராமசாமி-நாடகப் பேராசிரியர் ) பேசுவதாக நிறைவுபெறுகிறது அவ்வசனம் வருமாறு,

சொசைட்டில நடக்குறதலாம் பாத்துட்டு என்னால சும்மாலாம் போகமுடியல. கோபம், ஆத்தாமை எதாவது பண்ணுனாதான் தூங்க முடியும்னு வந்துட்டேன். ரொம்ப கொடுமை என்னன்னா, நாம யாருக்காக போராடுறோமோ யாருக்காக செத்துப் போறோமோ அவங்களே நம்மள காமெடியனா பாக்குறதுதான்…… நீள்கிறது வசனம்… இறுதியில் எல்லாத்தயும் வேடிக்க பாத்துட்டு மந்தை மந்தையா சாகுறீங்க??? நீங்க  பைத்தியமில்ல. நாங்க பைத்தியம் தான் என்று கும்பிடும் காட்சியோடு படத்தின் அரை ஒவ்வொன்றும் என் (நம்) கண்ணத்தில் விழுகிறது.

Share
Posted in: Posted on: வெள்ளி, 7 ஏப்ரல், 2017

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.