வெள்ளி, 3 மார்ச், 2017

சங்க ஏடு - தலைவியின் அடம்பிடிப்பு

Ulagasivan Sivan  /  at  மார்ச் 03, 2017  /  No comments

                   தலைவியின் அடம்பிடிப்பு

பழங்காலத்தில் கணவன் மனைவி இருவரும் உன்னதமான இல்லற வாழ்க்கையை நடத்தியுள்ளனர் என்பதற்குப் பல சான்றுப் பாடல்களைச் சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டலாம். இருப்பினும் காலத்தால் தனித்து நிற்கக் கூடிய பாடல்கள் சில இருக்கின்றன. அவற்றுள் ஒன்று கலித்தொகையின் பாலைக்கலியில் உள்ள மரையா மரல்கவர எனத் துவங்கும் ஐந்தாவது பாடல்.
இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் ஆன இரண்டொரு மாதங்களில் கட்டிய மனைவியை விட்டுவிட்டு சம்பாதிக்கும் பொருட்டு வெளிநாடு செல்கின்ற பழக்கத்தினைப் பெரும்பாலான ஊர்களில் காணமுடிகிறது. இக்காட்சி பழங்காலத்திலும் நிகழ்ந்தேறியிருக்கிறது. ஆம் தலைவன் தன் தலைவியைவிட்டுப் பொருள் தேடிச் செல்லும் சூழலைப் பொருள்வயிற் பிரிவு என்று குறிப்பிடுவர். அப்படி ஒருநாள்,
விடுமுறை முடிந்து, பொருள் தேடும் பொருட்டுப் பயணத்திற்குத் தேவையான பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான். பரபரப்பாகவும் அதேசமயம் தலைவியைப் பிரிகிறோம் என்கிற வருத்தத்தோடும்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். தலைவனின் இத்தகைய செயல்பாட்டினைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட தலைவி,
எங்கே புறப்படுகிறீர்கள்? என்று கேட்கவில்லை.  மாறாக என்னையும் கூடவே கூட்டிச் செல்லுமாறு வேண்டுகிறாள். காரணம் தலைவன் தன்னைவிட்டுப் பிரிகின்றான் என்பது அவளுக்குத் தெரியும். பிரிவை விரும்பாத தலைவி இவ்வாறு கூறிவிடுகிறாள். தலைவியின் அறிவுத்திறத்தைக் கண்ட தலைவன், தலைவிக்கு எடுத்துரைக்கிறான். தான் செல்லும் வழி அவ்வளவு எளிதானது அல்ல. கொடுமையானது. நீ வருவது தகாது. உன்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது என்று எடுத்துரைக்கிறான். இதைக் கேட்டதும் தலைவி மறுமொழி பேசுகிறாள். தலைவனின் பயணக்குறிப்பை அறிந்து கொண்ட தலைவி தலைவனுக்கு எடுத்துரைத்தது.
கவிதை வடிவம்
வறட்சியின் கோரத்தால்
புல்லைத் திண்ணும் காட்டுப்பசு
அன்று கற்றாழையைக்
கடித்துக் கொண்டிருந்தது
மழை பொழியாத காரணத்தால்
வறட்சி தாண்டவமாடியது..
உயர்ந்து ஓங்கிய மலைகள்
கடத்தற்கு அரிய காடு..
என்று வளமையின் அடையாளம்
கண்ணுக்கெட்டிய தூரம்
தென்படவில்லை வறட்சி.. வறட்சி..
இந்தக் கொடுமையான காட்டைக் கடந்தால்தான்
உயிருக்கு உத்திரவாதம்..
ஆனால் ஆறலைக் கள்வர்கள்
அம்பினை இழுத்துப் பிடித்து விடும்
விசையால் உடலில் அம்பு முழுதும் புகுந்து
தீராவலியை இமைப்பொழுதில் தந்திடும்
வலியால் தண்ணீர் தண்ணீர்
என்று நாக்கு தவிக்க
தண்ணீர் கிடைக்காமல் அருந்துயர் அடைந்திட
தனது கண்ணீரே தண்ணீராய்
நாக்கை நனைக்கின்ற
அவலக் காட்சிகள் நிறைந்த
கொடுமையான காடு என்று தலைவன் உரைக்கிறான்..
மனம் பொறாத தலைவியோ
என்னைப் புரிந்தது இவ்வளவுதானா தலைவா? 
இது உனது மாட்சிமைப் பண்புக்கு அழகா?
நீ இப்படி செய்தால் அன்பு எனும் அறம்
என்னைச் சூழும் என்று நினைத்தாயோ?
நீ கூறும் கொடுமையான காட்டிலே
நீ மட்டும் துன்பம் அடைவதை
என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது
உனது துன்பத்தில் பங்கு பெறுவதே
நல்ல மனையாளின் கடன்
உன்னுடன் துன்பம் பெறுவதே
எனக்குப் பேரின்பம்
ஆகவே என்னையும் அழைத்துச் செல்..!
என்று தலைவி உணர்வு மேலிட்டுத் தலைவனிடம் தனது ஆற்றாமையையும் அன்பையும் வெளிப்படுத்துகின்றாள். இதோ அந்தப் பாடலடிகள்
செய்யுள் – பாலைக்கலி(05)
மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங்கு அருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
உள்நீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற்றத்து அருந்துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமையது காடு என்றால்
என்நீர் அறியாதீர்போல இவைகூறின்
நின்நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்பு அறச்சூழாதே ஆற்றிடை நும்மொடு
துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு
உரைவடிவம்
மழை இன்மையால் காட்டுப்பசு கற்றாழையை உண்ண, உயர்ந்த மலைகளும் கடத்தற்கு அரிய காடுகளும் நிறைந்த வழியிடத்தே  மக்கள் செல்ல, ஆறலைக்கள்வர்கள் தங்களது சுரையம்பு உடலில் மூழ்கும்படியாக விசையுடன் செலுத்தி வழிப்பறி செய்வர். கொலையுண்டதால் உடலில் ரத்தமின்றி வாடுகின்ற நாவிற்குத் தண்ணீரை நாட தண்ணீர் பெறாமல் தடுமாறுகின்ற அவலநிலையில் தங்களது கண்ணீரே நாவினை நனைக்கிறது இத்தகு கொடுமைமிகுந்த காடு என்று நீர் கூறினால் மாட்சிமை பொருந்திய தலைவனே அது நினக்குப் பொருந்தாது. என்னை அறியாது அவ்வாறு கூறுகின்றாய். இதனால் அன்பு எனும் அறம் என்னைச் சூழாது. ஆற்றிடை வழியே துன்பம் நேரின் உனக்குத் துணையாக வருவதையே விரும்புகின்றேன். அதுவன்றி வேறு இன்பம் எனக்கு உண்டோ?
பெறக்கூடிய கருத்து
பொருள்வயிற் பிரிவில் அல்லது போர்வயிற் பிரிவில் தலைவியை உடன் அழைத்துச் செல்லுதல் தமிழர் மரபு அன்று என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இருந்தாலும் தலைவி இவ்வாறு உரைத்திருப்பது பெண்ணியக் குரலாகத் தென்படுகிறது. உணர்வு மேலிட்டின் ஊடாக மரபை மீறி அறிவுப்பூர்வமான சமூகக் கட்டமைப்பை உருவாகியிருக்கிறது.
அருஞ்சொற்பொருள்
மரையா – காட்டுப்பசு, மரல் – கற்றாழை, வரை – மலை, சுரம் – காடு, ஆரிடை – கடத்தற்கு அரிய வழி, புரையோர் – ஆறலைக்கள்வர்கள்

Share
Posted in: Posted on: வெள்ளி, 3 மார்ச், 2017

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.