புதன், 17 ஆகஸ்ட், 2016

பக்கோட்டி

எழுத்தாணி  /  at  ஆகஸ்ட் 17, 2016  /  No comments

பக்கோட்டி

“மஞ்சுவிரட்டும் மாட்டுவண்டிப்பந்தயமும் நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இத்தடை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது” என்ற செய்தியறிக்கையைக் கேட்டுவிட்டுப் பலருக்கு பதபதைப்பு ஏற்பட்டது உண்மைதான். அதில் பெரும்பாலானோர் மஞ்சுவிரட்டிற்குத் தடை என்பதை எதிர்த்துப் போராடவும் தொடங்கிவிட்டனர்.
 தங்கவேலு எந்த ஊரில் தட்டுவண்டிப் பந்தயம் நடந்தாலும் நடந்தே போய்ச்சேந்துடுவான். கைக்குத் துணையா அவன் மச்சினன் முருகரத்தினமும் கூடவே திரிவான். ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து குடிக்கிறதும் ஊர்நாயம் பேசுறதும் முக்கியமான இடங்கள்ல முக்கியமான ஆள்மாதிரி காட்டிக்கிறதும் இவனுகளுக்குக் கைவந்த கலை. இவய்ங்க நடந்து போன பிறகு பின்னாடி நின்னு புரணி பேசுற ஆள்தான் நிறைய பேர். நேருக்கு நேராக யாரும் பேசுறதில்ல. பேசுனா அன்னைக்கு முழுசும் இவய்ங்க அலப்பறதான். ஊரக்கூட்டி ரெண்டாக்கிப்புடுவாய்ங்க..
அரண்மனைப்பட்டி மாகாணத்தில் தட்டுவண்டிப்பந்தயம் காலங்காலமாக நடத்தி வருகின்ற கோயில் நிகழ்ச்சி. அதிலும் அரிச்சானூர் பந்தயம் என்றால் சிறுசு பெருசு அத்தனையும் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு காலையிலேயே கெளம்பிவிடும்.
தங்கவேலும் முருகரத்தினமும் அன்னைக்குக் வெள்ளெனக் கௌம்பிட்டானுங்க. ஊர்ப்பய எவனும் “ஏம்ப்பா எங்க கௌம்பிட்டீகனு“ கேக்கல. கேக்க யாரும் இன்னும் வீதிக்கு வரல என்பதுதான் உண்மை.
செங்கமங்கலான நேரம். வாயின் முன்பற்களுக்கு இடையில் பீடியை நறுக்கெனக் கடித்தபடி  பேசிக்கொண்டு வந்தான் ரத்தினம். திடீரென
ஆமா மாப்ள இந்த ஊர் பந்தயத்தப் பத்தி கேள்விப்பட்டுருக்கேன். அப்டி என்ன விசேசம்? இந்தக் கேள்விய கேட்டதும் தங்கம் அப்பதான் ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கினான். அதுவரை ரத்தினம் பேசியத கவனிக்காத தங்கத்துக்கு இந்தக் கேள்வி மட்டும் மனசுல ஒரு உற்சாகத்த ஏற்படுத்தியிருக்கணும். இப்படி ஒருத்தன் கேட்டுட்டா போதும். தன்னையும் நம்பி ஒருத்தன் கேக்குறானேங்குற மெதப்புல பொளந்து கட்டிடுவான். கிட்டத்தட்ட ஒரு வாத்தியாரு மாதிரி பேச ஆரம்பிச்சுடுவான். அவ்வளவு வரலாறும் அத்துப்புடி.
   மச்சாஆஅன் கருங்காப்பட்டி சங்கரபாண்டித் தேவர் மாடு, மூப்பந்திடல் சுப்புராஜ் மாடு, மேலச்சேரி முருகையா அம்பலம் மாடு, மேட்டுக்குடி திருநாவுக்கரசு மாடு, ஒண்டிப்புலி ராக்கன் மாடு, துறையூர் ரத்தினம் மாடு,  கண்டனூர் மாணிக்கஞ் செட்டியார் மாடுனு பெரிய பெரிய தலக்கட்டுக நேரடியாக் களத்துல குதிக்கிற ஊர்தான் அரிச்சானூர். சாதி, அரசியல், பணம் அத்தனையும் குவிஞ்சுகெடக்கும். அரிச்சானூர்ல மட்டும்   ஒருத்தன் தட்டுவண்டி ஓட்டி ஜெயிச்சுட்டானு வை அவன்தான் அடுத்த ஒன்றியக் கவுன்சிலர். இப்டி ஒன்றியக் கவுன்சிலர வச்சு்த்தான் இந்த ஜில்லாவுல தட்டுவண்டிப் பந்தயத்த நடத்திக்கிட்டு இருக்கானுக.  நீ வேணுனா பாருவேன் இப்ப அரசாங்கம் விட்டுருக்க அறிக்கையப் பாத்து ஊர்ப்பயலுக அவ்வளவு பேரும் பந்தயத்த நிறுத்திடுவாய்ங்க. ஆனா அரண்மனைப்பட்டி நாட்டுக்காரனுங்க மட்டும் மாட்ட அவுத்துக்கிட்டே இருப்பானுங்க.
எத்தனப் போட்டி மாப்ள இவனுக நடத்துவாய்ங்க? பான்பராக்கு எச்சிய துப்பிக்கிட்டே ரத்தினம் கேட்டது தங்கத்துக்கு எரிச்சல உண்டாக்கிடுச்சு. தங்கத்துக்கு பான்பராக்கு மட்டும் புடிக்காது. மத்தது எல்லாம் அத்துப்புடி. மச்சானாச்சே திட்ட முடியாம பேச்ச தொடர்ந்தான் தங்கம்.
 பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு மாடுனு மூனு வகையறாவ போட்டி நடத்துவாய்ங்க. இதுல பூஞ்சிட்டுப் பந்தயம் தான் மச்சான் இங்க படுஞ்சுறுசுறுப்பா நடக்கும்.
ஆமா சோனையன் பந்தயத்துல கலந்துக்குறாப்ளயா?
என்ன மச்சான் கேள்விது? சோனையனுக்காகத்தான் பந்தயம் பாக்கவே போறேன்.
பக்கோட்டினா சோனையன். சோனையன்னா பக்கோட்டி னு சும்மாவா சொல்லித்திரியிறானுங்க.
பூஞ்சிட்டு பந்தயத்தில் சோனையன் பெயர் அடிபடாமல் இருக்காது. பக்கோட்டினா அவந்தாய்யா.. அது ரெண்டும் காலா? இல்ல தண்டவாளம் வீலா? அப்டியொரு ஆள இனிப் பாக்கமுடியுமானு ஊர் முழுக்க பேச்சு. முன்னாடிலாம் யாருடைய மாடுனு விசாரிச்சுட்டுத்தான் பந்தய ரசிகர்கள் ஒக்காந்துருப்பானுங்க. இப்போலாம் சோனையன் எந்த வண்டில ஓடுறான்னு தான் கேள்வி.
சோனையன் என்ன சாதி மச்சான்?
தெரியல மச்சான். ஆனா கண்டிக்கருப்ப கும்புடுரவங்கனு ஊருக்குள்ள பேச்சு. அத விடு. அதுவா இப்ப முக்கியம். நீ இப்ப பாக்குறியே இந்த சோனையன் மலுங்கிட்டாப்ள. ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னாடி சோனையன்தான் தெக்குப் பக்கம் முழுசும் கொடிகட்டிப் பறந்தது. அடிச்சுக்க ஆளே இல்லயே. அப்படி ஒரு ஓட்டக்காரன். அட முத்து படத்துல கூட ரஜினி குதிரய அடிச்சு ஓட்டுவாருல. அவருக்குப் பின்னாடியே ஒரு வண்டில நம்ம சோனையன் மெரட்டிக்கிட்டு வருவாப்ளயாம். அந்த சீன எடுத்துப்புட்டானுகளாம்.
எதுக்காம்? தெரியல. ஒருவேள ஹீரோவ மிஞ்சி வேகமா ஓட்டிப்புட்டாரோ என்னவோ? நிஜ ஹீரோலாம் முகம் தெரியாமலே செத்துப் போயிடுறானுங்க மச்சான். அதுதானே நடக்குது இங்க.  
 சோனையன் அவுங்க இனத்துச் சாமியாடியாம். முன்னாடிலாம் முடிய நல்லா வளத்து முடிஞ்சு கட்டிக்கிட்டு கூட்டத்துல நடந்து வருவாப்ள பாரு. சும்மா பட்டயக் கௌப்புவாப்ள. நல்லா இறுகிப்போன ஒடம்பு, காத்தாலை விசிறி மாதிரி இருக்கும் ரெண்டு கையும். செவ்வட்டை மாதிரி தழும்பும் காயமும் ஒடம்ப கிழிச்சுக் கெடக்கும். ஓடியோடி கனத்துப்போன  தொடை. கிட்டத்தட்ட அறுத்துப்போட்ட மரம் மாதிரியிருக்கும். அவ்வளவா யார்ட்டயும் பேசமாட்டாரு. ஆனா களத்துல குதிச்சுட்டார்னு வையி துறுதுறுனுதான் இருப்பாப்ள. எனக்கென்னமோ இப்பலாம் வேகம் கொறஞ்ச மாதிரி தெரியுது.
ரத்தினத்துக்கு சோனையன பத்தி அவ்வளவு பரிச்சயம் இல்ல. தங்கம் சொன்ன பிறகு சோனையன ரசிச்சுப் பாக்கனும்னு தோணிருக்கனும்.
ரெண்டு பேரும் இப்டி பேசிக்கிட்டே பந்தயம் நடக்குற இடத்துக்கு பக்கத்துல வந்துட்டாங்க. அந்த ஒலிபெருக்கி நிமிசத்துக்கு பத்து முறை சோனையன பத்திதான் ஊதிக்கிட்டு இருந்தது.
மச்சான் அந்தா பாரு சோனையன் வர்றாப்ள.
ஆமா மச்சான். உடம்போடு உடம்பாக ஒட்டிய டவுசரையும் பனியனையும் போட்டுக்கொண்டு கையயும் காலையும் ஒதறிக்கொண்டு ஏதோ எக்ஸசைஸ் எடுத்துக்கொண்டு இருந்ததை வழியில் வந்த தங்கம் ரத்தினம் தவிர வேறு யாரும் பாத்திருக்க வாய்ப்பில்லலை.
அண்ணே! நல்லாருக்கீகளா? இன்னக்கி மெரட்டிப்புடுங்கணே! ஒங்களுக்காகத்தான் மங்கலத்துல இருந்து வந்துருக்கோம். ரத்தினம் தன்னை அறியாம கத்திட்டான்.
ம்ம்ம்ம் னு தலைய அசைச்சு கைய ஒசத்திக் காட்டி நின்ன இடத்துலயே ஓடிக்கிட்டு இருந்தத தங்கம் ரொம்ப ரசிச்சுப் பாத்துட்டு போட்டி நடக்குற இடத்த நோக்கி இருவரும் மெதுவாக ஊர்ந்தனர்.
அடுத்ததாக பூஞ்சிட்டுப் பந்தயம் நடக்கவிருப்பதால் பொதுமக்கள் அனைவரும் ரோட்டைவிட்டு ஓரமாக நின்று ரசிக்கும்படி விழாக்கமிட்டியார் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏம்பா அந்த மினி பஸ் காரன யாரு உள்ள விட்டது? கமிட்டியாளுக சத்த நிறுத்தி அனுப்புங்கப்பா. பந்தயம் ஆரம்பிக்க போகுது.
பூஞ்சிட்டுப் பந்தயம் பாக்கத்தான் ஊருசனம் அவ்வளவும் கூடி நிக்குது. அதுவும் பக்கோட்டி சோனையன பாக்க ரசிக பட்டாளமே இருக்கு. அதுல பாதி அறுபதுகள தாண்டுன ரசிகர்கள்.
அவ்வளவு நேர்த்தியா மாட அடுச்சு மாட்டுக்கு முன்னாடி ஓடி மாட்ட இழுத்துக்கிட்டே ஜெயிச்ச கதைலாம் சோனையனுக்கு உண்டு.
அந்தா பாருங்கப்பா சோனையன் நிக்குறான். ஆமா ஆமா மஞ்ச சட்ட தானே? னு கூட்டத்துல யாரோ கௌப்பிவிட்டாய்ங்க.
ஆனா சோனையன் வர்றதயே பெரிய ஹீரோவோட என்ட்ரி மாதிரி அனௌன்ஸ் பன்றவன் பிசிறு தட்டிப்புடுவான்.
இதோ நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒண்டிப்புலி ராக்கனோட ரெண்டு செவல காளையும் களத்துல நின்றுகொண்டிருக்கின்றன. அது மாடா இல்ல குதிரைகளா என்று தெரியாதபடி ஜைஜான்டிக்கா நிற்பதை பாருங்கள். இந்தச் செவல காளைகளோட ஓட்டுக்காரன் வந்துவிட்டார். ஆனால் தென்னாட்டுச் சிங்கம் காளைகளின் வேங்கை  பக்கோட்டி சோனையன் இன்னும் வரவில்லை. இதோ வந்துவிட்டார்… என்று கூவு கூவு என்று கூவி எடுத்துவிட்டான் அ்ந்த மைக்செட்காரன்.
கைதட்டல்களும் விசில்களும் சோனையா சோனையா என்ற கூப்பாடுகளும் ஓய்ந்தபாடில்லை..
சரி சரி எல்லாம் ஓரமா நில்லுங்கப்பா பந்தயம் ஆரம்பிக்கப்போகுது.. மைக்செட்
ஏழு வண்டிகள். நேராக ரோட்டில் நிறுத்த முடியாததால் ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகள் நிற்கின்றன. ஒவ்வொரு வண்டியாக மைக்செட்காரன் அனௌன்ஸ் பன்றான்.
முதலாவதாக மேட்டுக்குடி திருநாவுக்கரசு மாடு,
இரண்டாவதாக கருங்காப்பட்டி சங்கரபாண்டித் தேவர் மாடு 
மூன்றாவதாக மேலச்சேரி முருகையா அம்பலம் மாடு
நான்காவதாக கண்டனூர் மாணிக்கஞ் செட்டியார் மாடு
ஐந்தாவதாக ஒண்டிப்புலி ராக்கன் மாடு
ஆறாவதாக மூப்பந்திடல் சுப்புராஜ் மாடு
இந்த மாடுகளுக்குப் பின்னாலும் வண்டிகளை ஓட்டுகிறவர்களுக்குப் பின்னாலும் பக்கோட்டிகளுக்குப் பின்னாலும் வெவ்வேறு பின்புலங்கள் இருப்பதெல்லாம் வேறு கதை.
ஏம்ப்பா ஒதுங்குப்பா. காளைகள் எல்லாம் சீறிப் பாஞ்சுக்கிட்டு இருக்கு. கொழந்தைகள குறுக்க வுட்டுறாதீங்க கவனம் கவனம் னு மைக்செட் முன்னாடி போய்க்கொண்டிருக்க.
அரியானூர் விலக்கிலிருந்து கீரணிப்பட்டி வளைவு வரை சென்று கொடியை வாங்கிக்கொண்டு தொடக்க எல்லைக்கு திரும்ப வேண்டும்.

முதலில் வரும் வண்டிக்குப் பாராட்டும் பரிசும் வழங்கப்படும். கிட்டத்தட்ட ஒரு இலட்சம் இருக்கும்.
அதோ விசில் ஊதப்பட்டுவிட்டது. காளைகள் சீறிப்பாய்கின்றன. ரசிகர் பட்டாளம் கூச்சலிடுகின்றனர். போதாக்குறைக்கு மைக்செட்.
ஏழு மாடுகளுக்கு முன்பக்கமாக விழாக்கமிட்டியார் பைக்குகளில் பறக்கின்றனர். பின்புறமாக ரசிகர் பட்டாளம் எப்படியும் இருபத்தஞ்சு முப்பது பைக்குகளில் உறுமிக்கொண்டு செல்கின்றனர்...
ஏய் அந்தா பாரு சோனையன். சோனையா வெரட்டி ஓட்டு வெரட்டி ஓட்டுனு ஒரே இரைச்சல். ஆனால் சோனையன் யாரையும் கண்டுகொள்ளவில்லை. வெற்றிலையைப்  போட்டுத் துப்பிய வாயுடன் ஹேய் ஹேய் னு வண்டிய விட்டு இறங்காம தட்டிக்கிட்டு இருக்கான். மற்ற வண்டிகளோட பக்கோட்டிகள் எல்லாம் வண்டிய விட்டு இறங்கி லீடிங் கொடுக்க ஆரம்பிச்சாட்டானுங்க. ஆனா சோனையன் அசால்ட்டா வண்டிலயே வண்டிக்காரனோடு ஒக்காந்துட்டு இருந்தத எ்ல்லாரும் வெறுப்போடு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க..
யோவ் அவன் ஸ்டைலே அதுதான்யா போகும் போது விட்டுடுவான். வரும் போது பாருனு தங்கம் பொங்கி எழுந்துட்டான்..
எல்லையில் ஐந்தாறு மண்ணெண்ணெய் ட்ரம் நிறுத்தப்பட்டிருக்கும். அந்த ட்ரம்களிடம் மாடுகளை வளைத்துக் கொடியையும் வாங்கிக்கொண்டு பிறகு ஓட்ட வேண்டும். அந்த இடம் தான் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கின்ற இடம். கொடியை வாங்குகின்ற இடத்தில்தான் சோனையன் சாகசங்களைக் காட்டி காளைகளை இறங்கி தட்டுவான்.
ஐந்தாவது இடத்தில் போய்க்கொண்டிருந்த ஒண்டிப்புலி ராக்கனோட மாடு இரண்டாம் இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. முதலாவதாக போய்க்கொண்டிருந்த மேட்டுக்குடி திருநாவுக்கரசு மாடு நான்காவது இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. ஆறாவது இடத்தில் போய்க்கொண்டிருந்த  மூப்பந்திடல் சுப்புராஜ் மாடு இப்போது முதல் இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. மற்ற மாடுகளைப் பற்றி மைக்செட் சொல்லவில்லை. அவைகள் தூரத்தில் வந்து கொண்டிருக்கலாம். அல்லது ரோட்டை விட்டுக் கீழே விழுந்திருக்கலாம். அல்லது பக்கோட்டி மாடுகளின் தொடைகளில் தார்க்குச்சியால் குத்தியதில் ரத்தம் பீறிட்டுக் கொப்பளித்து மயங்கியிருக்கலாம்.
மூன்று மாடுகளும் வாயில் நுரை தள்ளிக்கொண்டு கண்கள் இரண்டும் பிதுங்கியபடி ஓடிக்கொண்டிருக்கின்றன.
இன்னும் இரண்டாவது இடத்திலேயே சோனையன் ஓட்டிக்கொண்டிருப்பதை ரசிகர்கள் விரும்பவில்லை. சோனையா வெரசா ஓட்டு ம்ம்ம் இன்னும் வெரசா..
சோனையன் தன் பிடரியில் கால் அடிக்கிற மாதிரி பிசாசுத்தனமாக மாட்டை விரட்டினான்.
ஹேய் ஹேய்… ம்ம்ம்ம்… உச்உச்உச்…
இரண்டில் ஒரு செவலக்காளைக்கு என்ன ஆனதென்று யாராலும் ஊகிக்க முடியல. திடீரென வெள்ளை முழி தெரியும் அளவுக்கு நான்கு கால்களும் பின்னிக்கொள்ள நிதானம் தவறிப் போனது. இன்னொரு மாடும் தன் நிலை மாறிப்போனது. வண்டியும் குடம்சாய்ந்து போக வண்டி ரோட்டைவிட்டுச் சரிந்து மாட்டின் தோல்கள் உராய்ந்து ரத்தம் சொட்ட சொட்ட பெரிய குழிக்குள் நொருங்கி விழுந்தன.மாடுகள் இரண்டும் குத்துயிராகக் கிடக்க வண்டிக்காரனின் இடது கை முறிந்து கால் விரல்கள் துண்டித்துப் போக இழுத்துக் கொண்டு கிடந்தான்..
சோனையன் மட்டும் ரோட்டின் மேலேயே நின்று கொண்டிருக்கிறான்..
அவன் பார்வைகள் துடித்துக்கொண்டிருக்கிற செவலயைவிட்டு மீளவில்லை.
சோனையா மாட்ட தூக்கி ஓட்டு.. ம்ம்ம் ஒன்னால முடியும்னு யாரோ ஒருவன் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தான்..
தங்கமும் ரத்தினமும் உக்காந்திருந்த இடத்துல இந்தச் சம்பவம் நடந்தத அவங்க எதிர்பார்க்கல.
வண்டிய விட்டு இறங்கி ஓட்டியதுல சோனையன் மட்டும் ஓடியபடியே நின்னுட்டான்..
அதோ அந்த மாடு கடைசியாக ஒருமுறை சோனையனைப் பார்த்துக் கொள்கிறது. இன்னொரு மாடும் சோனையனைப் பார்க்க தன் கழுத்தைத் திருப்புகிறது..
சோனையன் எங்கேயும் திரும்பாமல்  அந்த செவலைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறான்..
தூரத்தில் மைக்செட் மூப்பந்திடல் சுப்புராஜ் மாடு முதல் பரிசினைத் தட்டிச் சென்றுள்ளது. அதற்கு மேல் யாரும் அந்த மைக்செட்டை கேக்க விரும்பவில்லை..
தான் சாகப் போவதையும் மனிதர்கள் வேடிக்கை பார்ப்பதையும் அந்த செவலைகள் விரும்பவில்லை. அதோ செத்துக் கொண்டிருக்கின்றன..



  

Share
Posted in: Posted on: புதன், 17 ஆகஸ்ட், 2016

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.