புதன், 3 ஆகஸ்ட், 2016

பழைய பேருந்து நிலையம்

எழுத்தாணி  /  at  ஆகஸ்ட் 03, 2016  /  3 comments

           பழைய பேருந்து நிலையம்


பலாப்பலோய்.. பலாப்பலோய்.. பாக்கெட்டு பத்துருவா.. தேன்சொலை தேன்சொலை இப்படி அந்த வியாபாரி கத்துனது பல பேருக்கு எரிச்சல உண்டாக்கி இருக்கனும். யார்ரா இவன் காதுக்குள்ள வந்து கத்திக்கிட்டு? னு தூக்கத்துல திட்டிக்கிட்டே மறுபடியும் ஒரு பெரியவர் தூங்குனத என்னைத் தவிர அநேகம் யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
 காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு வர அதிகபட்சம் இரண்டரை மணிநேரம் என்பது பழக்கப்பட்ட பயணிகளுக்குத் தெரியும். என்னமோ தெரியல அந்த டிரைவர் இழு இழுனு 3 மணி நேரத்திற்கு இழுத்துட்டார்..
திருச்சிக்கு வருவதென்றால் பெரும்பாலும் சென்னை போகிற பேருந்து நின்றால் நடத்துனர் அனுமதியோடு ஏறிவிடுவேன். விழாக் காலங்களில் ஏறுவது சிரமம். அப்பொழுது ஒன் டு ஒன் பேருந்து நின்றால் ஏறுவது வழக்கம். இந்த மாதிரியான பழக்கத்திற்குக் காரணம் காரைக்குடிதிருச்சி வழிப்பாதையில் ஏராளமான நிறுத்தங்களும், கூட்ட நெரிசலும் தான். எது எப்படியோ சாதாரண பேருந்திலோ எக்ஸ்பிரஸ் என்று பெயரளவில் போட்டுக் கொண்டு ஊரை ஏமா(சு)ற்றும்  பேருந்துகளிலோ பெரும்பாலும் ஏறுவதைத் தவிர்த்தே வந்துள்ளேன் அண்மைக் காலமாக...
இப்படி எத்தனை நாள் அமையும்? நாம் நெனச்ச மாதிரி நடக்காத போது தான் வாழ்க்கையின் மீதான வெறுப்புணர்வு பீறிட்டுக் கொப்பளிக்கிறது. இதுவே தொடர்ந்து நடக்கும் போது முழுமையாக நம்மை வெறுக்க நேரிடுகிறது..
அப்படி வெறுத்த நாளில் தான் இப்பொழுது பயணம் செய்து கொண்டிருக்கிறேன்..
அந்தப் பலாப்பழத்தை யாரும் வாங்கியதாக தெரியவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால் யாரும் விழித்துக் கவனித்ததாகக் கூடத் தெரியவில்லை.
வெள்றி பிஞ்சு.. வெள்றி பிஞ்சு.. வெள்றி பிஞ்சோய்.. அண்ணே வேணுமா..? யாரோ நடுத்தர பெண்மணி பேருந்தின் சன்னல் வழியாகக் கூவிக்கொண்டிருந்தாள். பேருந்துக்குள் தலைப்பாகை கட்டிக்கொண்டிருந்த ஒரு பெரியவர் மட்டும் வாங்கிக் கொண்டார். மொளகாப்பொடி போட்டுத்தாம்மா..? காரமா சாப்பிட்டுப் பழக்கம் போல.. பேருந்து புறப்பட்ட இடம் செட்டிநாடு அல்லவா?
இஞ்சிமரப்பா இஞ்சிமரப்பா
எவ்வளவு நல்ல பதார்த்தம்? யாரும் சீண்டவில்லை
வாய்ப்பாடு அட்டை, ரேசன் கார்டு அட்டை செல்போன் கவர், ஸ்போக்கன் இங்கிலீஸ்னு மெது மெதுவா சொல்லிக்கொண்டு முதியவர்களையும் சிறுசுகளையும் குறிவைத்து விற்பனையைத் தொடங்கினார். இந்தப் பெரியவரை திருச்சிக்கு வரத் தொடங்கிய காலக்கட்டங்களில் இருந்து பார்த்து வர்றேன்.. அதே தொழில்தான். பொருள்களும் அதே தான். கூடுதலாக மூணு பிரஸ் பத்து ரூவா எனும் வாசகத்தை மட்டும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஏம்ப்பா தம்பி எவ்வளோ நேரம் பஸ்சு நிக்கும்..?
தெரியலண்னே.. முன்னாடி நிக்கிற ரெண்டு பஸ்சும் எடுத்ததும் இத எடுப்பாங்கனு நெனக்கிறேன்..
சரிப்பா அதுக்குள்ள வந்துடுவேன். சத்த எடத்த பாத்துக்குறியா? ஒண்ணுக்கடுச்சுட்டு வந்துடுறேன் னு என்னோட பதிலை எதிர்பார்க்காம கௌம்பிப் போய்ட்டாரு.
லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்.. பேருந்தில் பயணிக்கிறவர்களின் அன்பான கவனத்திற்கு..
ஒரு நிமிசம் கவனிங்க சார்.. இப்ப பேருந்துல போகும் போதோ வீட்டுல இருக்கும் போதோ தலைவலி நம்மள பிச்சு எடுத்துடும். அதுலயும் பாருங்க ஒன்சைடு, டபுள்சைடு தலைவலிலாம் வரும். இனிமே அந்த கவலை வேணாம். பாருங்க சார் பாருங்க பெங்களுர் பசகுளோடா காட்டுல இருந்து சுத்தமான தானிய வகைகள்ல இருந்து தயார் பண்ண நம்ம தைலத்த இந்த சுத்தமான பஞ்சுல கொஞ்சமா நனச்சுக்கிட்டு ரெண்டு பொட்டுலயும் மெல்லமா அழுத்திக் கொடுத்தீங்கனா அஞ்சு நிமிசத்துல உங்க தலைவலி காணாமப் போயிடும். எல்லா மருந்து கடைகளிலும் கெடைக்கும். வெளில வாங்குனா இருபது ரூபா. ஆனா கம்பெனி வெளம்பரத்துக்காக வெறும் பத்தெ ரூவாய்க்கு  தர்றோம்..
வேணுமா சார்..? வேணுமா சார்..?
முழங்கால் வலி, ஜலதோசம், வாய்ப்புண், வயித்தவலி, வாந்தி மயக்கம், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி எல்லாத்துக்கும் இத தேய்க்கலாம் அஞ்சு நிமிசத்துல சரியாகலனா என்னனு கேளுங்க ஸ்டாக் கொஞ்சம் தான் சார் இருக்கு.
எல்லா நோயையும் சொன்னதும் ஒன்னு ரெண்டு னு ஆரம்பிச்சு நெருக்கி பத்துப் பேருக்கிட்ட வித்து 100 ரூபா சம்பாரிச்சுட்டான்..
அப்படியே பின்வழியா போயிட்டான் தலைவலி..
டம்முனு கதவ சாத்தி சீட்டுல உக்காந்துட்டாரு டிரைவர். டிர்ர்.. டிர்ர்டிர்ர். னு உருமிக்கொண்டு நகராமல் நின்று கொண்டிருந்த பேருந்து இப்போ நகருமா? அப்போ நகருமானு கவனிச்சுக்கிட்டே இருந்தேன். மெல்ல நகரத் தொடங்கியது ஆனால் நகரவில்லை. ஆமாம் எதிரே நின்ற பேருந்து தான் நகர்ந்தது. ஆனால் எங்க பேருந்து நகர்ந்த மாதிரியே இருந்தது.
ஆமா பாத்ரூம் போனவர காணோமே
ஸ்ஸ்ஸப்பா.. வெயிலு கொளுத்துதுப்பா னு கையில ரெண்டு சோளக்கருதோட வந்தாரு. தம்பி ஒன்னு எடுத்துக்கோங்க..
இல்லங்க பரவால. வேணாம்.
அதுக்கு மேல அவரு கட்டாயப்படுத்தல. வாங்கிடுவேனோனு பயந்திருக்கலாம். பிடிச்சு வாங்கிருக்காரு போல..
இதற்குமேல் என் கவனம் ஒரே இடத்தில் குவிந்து போயிருந்ததை மிக தாமதமாகத்தான் உணர்ந்தேன்.
அந்தக் குழந்தைகளின் சேட்டைகளை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். அதில் இந்தப் பெண் குழந்தை என்னுடன் சைகை மொழியில் போட்டி போட்டுக் கொண்டிருந்தாள். அவளின் மழலை செய்கைகள் என்னை ஒரு கரிசன கர்த்தாவாக மாற்றிக் கொண்டிருந்தனஇதோ அந்த மழலையின் உலகத்திற்குள் மெல்ல மிக மெல்ல நுழைந்து கொண்டிருக்கிறேன்..
வளைந்த புருவத்தைக் கண்மையால் அழகு தீட்டியிருந்தாள். தன் அண்ணனோடு அவள் அடித்த லூட்டிகளை ரசித்த போது அவன் அண்ணனும் என்னுடன் ஐக்கியமாகிவிட்டான்.
இப்போது இரண்டு குட்டிகளும் என்னைப் பார்த்துக் கொண்டே எனக்காக ஏதேதோ விளையாட்டுகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தனர்.
அவர்களின் தீவிரமான ரசிகராக அந்தப் பேருந்தில் நான் மாறிப் போயிருந்தேன் அல்லது மாறிக் கொண்டிருந்தேன்.
எத்தனையோ திண்பண்டங்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. குட்டிகள் இரண்டும் எவற்றையும் கண்டு கொள்ளவில்லை. சீட்டோஸ் சில்ரன்ஸ் அல்லவா?
மூன்றிருக்கை கம்பியின் வழியாகக் குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள் குட்டி தேவதை. நானும் முடிந்தவரை ஹாய் சொல்லிக் கொண்டேயிருந்தேன். இடையிடையே அவள் அம்மாவையும் கவனித்துக் கொண்டதும் தெரிந்தது.
எனக்காகவே அவர்களின் அசைவுகளும் விளையாட்டுகளும் இருந்தது போல் நினைப்பு. ஏன் எனக்காக அவர்கள் இத்தனையையும் செய்து காட்ட வேண்டும்? வேடிக்கைகாரர்களாக அவர்கள் ஏன் மாற வேண்டும்? எந்த மொழியும் இல்லாமல் எப்படி இந்த பார்வைமொழி எங்களுக்குள் வெற்றி பெற்றது?
குழந்தைகள் இந்த உலகின் ஆகச் சிறந்த கலைஞர்கள். நாம் கண்டுகொள்ளாதவரை அவர்கள் எதையும் நமக்கு நிகழ்த்திக் காட்டுவதில்லை. ஆனால் நிகழ்த்திக்காட்ட அவர்களிடம் ஏராளம் உள்ளன. நாம் பெரியவர்களாக இருக்கும்வரை அத்தனை நிகழ்வுகளும் நமக்கு நிகழ்த்திக் காட்டப்படுவதில்லை.
அந்தக் குழந்தைகளின் அம்மா ஏன் பின்னாடியே திரும்பிப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள் என்பதை ஊகிக்க முடியவில்லை..
ஒருவேளை என்னைச் சந்தேகப்படுகிறார்களோ? அல்லது என் குழந்தைகளை தொந்தரவு செய்யாதீர்கள் என்கிற பார்வையோ அது? ஆனால் பார்வை என்னைத் தாண்டி செல்கிறதே..
ஒன்றும் புரியவில்லை..
மீண்டும் குழந்தைகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டேன்..
பேருந்து கௌம்பிடுச்சு. மெல்ல.. மெல்ல.. சிரமப்பட்டு ஸ்டேரிங்கை டிரைவர் வளைத்துக் கொண்டிருந்தது மட்டும் கண்ணுக்கு லேசாக தெரிந்தது..
சார் கொஞ்சம் நிறுத்துங்க. என் வீட்டுக்காரர் இன்னும் வரல. கன்டக்டர்  நிறுத்துங்க அவரு வரல.
எங்கமா போனாரு?
பாத்ரூமுதான்..
விசில் சத்தம் இல்லாமலே டிரைவர் நிப்பாட்டிட்டாரு
எங்கமா காணோம்.? இவ்வளவு நேரம் நின்னுச்சுல என்னதான் பண்ணுனீங்க?
ஐயோ காணோமே.. எங்க போய்த் தொலஞ்சாருனு தெரியலயே..
குழந்தைகள் முகம் மாறத் தொடங்கியது. சத்தம் போட்டுக் கொண்டிருப்பது குழந்தைகளின் அம்மாதான்..
போன் பண்ணுங்கம்மா..
எனக்கிட்ட கொடுத்துட்டுப் போயிட்டாரே..
கிழிஞ்சது..
ஏம்மா டைம் ஆகுதுமா. ஏதாவது பண்ணுங்க.
சரி எறங்குடி. டேய் எறங்குடா. அந்தப் பைய எடுத்துக்க.
ரெண்டு குழந்தைகளும்  திகைத்துப் போய் நின்றார்கள். அவர்களால் நம்ப முடியவில்லைஅவர்களின் அத்தனை சந்தோசங்களும் ஒரு நொடியில் உடைக்கப்பட்டது.
ஏம்மா எறங்க சொல்லுற? உங்க அப்பா வரவேணாமா? எறங்கு.
இரண்டு பேரும் என்னைக் கவனிக்காமல் அம்மாவின் பதற்றத்தில் அவசர அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தனர்.
குழந்தைகள் வருத்தப்படுவதில் இவ்வளவு ஓலம் இருக்கிறதா..? அவர்களின் அப்பா வந்துவிடக் கூடாதா? அந்த இரண்டு குழந்தைகளும் மீண்டும் வந்து அதே சந்தோசத்துடன் எனக்கு அருகில் அமர வேணடும் என்று யாரையோ நினைத்துக் கொண்டேன்
இரண்டு குழந்தைகளும் இறங்குவதைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பையன் தான் ரொம்பவும் வேதனை அடைந்திருக்கிறான் போல. பேருந்து நகர்ந்து கொண்டிருந்ததையே பார்த்துக் கொண்டிருந்த ஏக்கமான பார்வை என்னைக் குடைந்துவிட்டது.
பேருந்தின் பின் கண்ணாடி வழியாக பார்த்தபோது
அவர்களின் அப்பா வந்துவிட்டிருந்தார். ஆனால் பேருந்து மிக தூரத்தில் வந்துவிட்டது. நிறுத்திவிடலாமா என்ற எண்ணம் பலிக்கவில்லை. வேகம் காட்டத் தொடங்கியது பேருந்து.
என்ன ஆச்சு எனக்கு? மனதில் ஏதோ ஒரு பிணைச்சல்.. திருச்சி சேரும் வரை குழந்தைகளின் அரட்டைகளைவிட திடீரெனக் கலைக்கப்பட்ட அவர்களின் சந்தோசமற்ற முகம் உறுத்திக்கொண்டே இருந்தது. அப்பாக்கள் மீது கோபம் தீர்ந்தபாடில்லை..
புதுக்கோட்டை பேருந்து நிலையம் வரும் பொழுதெல்லாம் அந்த இரண்டு சிறுவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை பேருந்தை நிறுத்திக் காட்டுவேன் என்கிற தைரியத்துடன்..

எல்லாரும் அதே பொருள்களை அப்படியே விற்றுக் கொண்டிருக்கிறாரக்ள். ரெண்டு இடத்தையும் தாண்டி இப்போ முதலில் நிற்கிறது பேருந்து. இன்னும் இரண்டு நிமிசத்தில் கிளம்பிவிடுமாம்
குழந்தைகள் குழந்தைகள் என்கிறது மனது…

Share
Posted in: Posted on: புதன், 3 ஆகஸ்ட், 2016

3 கருத்துகள்:

  1. தம்பி தங்கள் பதிவு நன்றாகவுள்ளது. இயல்பான மொழிநடை. இலக்கியத்தைக் கடந்து இன்றைய வாழ்வை பேசும் இயல்பு. தாங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தங்கள் எழுத்துக்களுக்கு வாசிப்பாளரையும் கையைப் பிடித்து இழுத்துச்செல்லும் ஆற்றல் உள்ளது. இந்த மொழிநடை எல்லோருக்கும் வந்துவிடாது. வளர்க..

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. நன்றி அண்ணா! தங்களின் மறுமொழியைக் காலம் கடந்து பார்க்க நேரிட்டதற்குப் பொறுத்தருள்க. மிக்க நன்றி.தங்களின் ஊக்கப்படுத்துதலுக்கு நன்றிகள் பல.

      நீக்கு

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.