திங்கள், 25 ஜூலை, 2016

சங்க ஏடு : தேன்சுவையை விட இனிது

எழுத்தாணி  /  at  ஜூலை 25, 2016  /  No comments

சங்க ஏடு : தேன்சுவையை விட இனிது


ஒரு நல்ல நாளில் தலைவனுடன் சென்று இல்லறத்தைச் சீரும் சிறப்புமாக நடத்திவிட்டு பிறிதொரு நாளில் மீண்டும் தனது பிறந்த வீட்டிற்குத் தலைவி வருகின்றாள். அப்பொழுது தலைவியின் தோழி “ஏன்டியம்மா நீ வாழ்க்கைப்பட்டுப் போன உன் தலைவனது ஊரில் குடிப்பதற்கு ஒரு நல்ல தண்ணீர் கூட இல்லையாமே?” என்று தலைவியை நோக்கிக் கேட்கின்றாள். அதற்குத் தலைவி யார் சொன்னது என்று மறு வினா எழுப்பித் தனது தலைவனின் ஊர்ப்பெருமையை எடுத்துரைக்கிறாள். எப்படி என்கிறீர்களா?

கவிதை வடிவம்

உயிரினும் மேலான தோழியே
நான் கூறுவதைச் சற்று
செவிமடுத்துக் கேட்பாயா..?
ஆம் கொஞ்சம் விரும்பித்தான்
கேளேன் தோழி..!
என் தலைவனது நாட்டில் 
வறுமை இருக்கிறதா
என்றெல்லாம் தெரியாது
ஆனால்
தண்ணீர் வற்றிய
ஒரு கிணற்றின்
அடிப்பகுதியை ஒருநாள் கண்டேன்
கிணற்றின் தாழ்வாரப் பகுதியில்
தழைகள் உதிர்ந்து
மூடப்பட்ட நிலையில்
சிறிதளவு தண்ணீருடன்
அந்தக் குழி காணப்பட்டது
அந்தச் சிறிதளவு தண்ணீரையும்
அங்கு அலைந்து திரிந்த
மானானது உண்டு
கலக்கிவிட்டுச் சென்றது..
அந்தக் கலங்கள் நீரை
எடுத்து நான் உண்டேன்
அடடா..
என்ன சுவை..
என்ன ஆனந்தம்..
உண்மையில் அந்தத் தண்ணீர்
நம் வீட்டின்
தோட்டத்தில் உள்ள
தேனை எடுத்து அதில்
பால் கலந்து
இனிமை என்று கூறுவாயே.?
அதைவிட மலமடங்கு
இனிமையுடையது
என் தலைவன் நாட்டில் உள்ள
கலங்கள் நீர்..!
இந்தக் கவிதைக்குரிய சங்க இலக்கியப் பாடலைப் பாருங்கள். ஐங்குறுநூற்றுப் பாடல் அது.

                                  அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பை
                                 தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
                                  உவலைக் கூவற் கீழ
                                  மானுண்டு எஞ்சிய கலுழி நீரே    (ஐங்.குறிஞ்.203)  

  உரைவடிவம்

அன்னையே! நான் கூறுவதை சற்று விரும்பிக் கேட்பாயாக. எம் தலைவனது நாட்டில் தாழ்ந்த பள்ளத்தில் சருகுகள் மூடப்பட்ட நிலையில் கிடந்த சிறிதளவு நீரினை அங்கிருந்த மான் ஒன்று கலக்கிவிட்டுச் சென்றுள்ளது. அந்தத் தண்ணீரை நான் உண்டபொழுது அன்றொரு நாள் நம் வீட்டுப் படப்பையில் கட்டியிருந்த தேனை எடுத்து அதனுடன் பால் கலந்து தருவாயல்லவா! அந்தச் சுவையினும் மிகுந்த சுவையுடையது.

அருஞ்சொற்பொருள்

படப்பை – வீட்டுத் தோட்டம், உவலை – தாழ்ந்த (அல்லது) உலர்ந்த சருகுகள், கூவல் – நீர் பெறுதலுக்காக அகலப்பட்ட குழி, கலுழி – கலங்கள்

கருத்து

புகுந்த வீட்டு நெருக்கடிகளைத் தன் பிறந்த வீட்டில் சொல்லாமல் புகழ்பாடி வாழந்த பெண்டிர் நம் தமிழ்ப்பெண்கள். இந்நிகழ்வுகளை இன்றும் நம் கிராமங்களில் காணலாம். இதன் வளர்ச்சியே கணவன் பெயரைக் கூட மனைவிமார்கள் சொல்லாமல் வாழ்ந்தது என்று கருத இடமளிக்கிறது.





Share
Posted in: Posted on: திங்கள், 25 ஜூலை, 2016

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.