சனி, 4 ஜூன், 2016

சங்க ஏடு : உயிரும் மகளும்

எழுத்தாணி  /  at  ஜூன் 04, 2016  /  No comments

சங்க ஏடு : உயிரும்  மகளும்  

     
    ஆணும் பெண்ணும் பெற்றோர்க்குத் தெரியாமல் காதல் கொள்ளுதல் என்பது உலகெங்கிலும் நடக்கின்ற ஒன்று. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தமிழ்ப் பாரம்பரியத்தில் தொடர்ந்து வருகின்றது. ஆனால் அன்று ஒரு நாகரிகம் இருந்தது, இன்பமும் துயரமும் கலந்து இருந்தது. எப்படியென்று அகநானூறு என்னும் பழந்தமிழ் நூல் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.   
பெற்றோர்க்குத் தெரியாமல் காதல் வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் தலைவி (பெண்). தலைவனும் தலைவியும் சந்தித்து உரையாடுவதற்கு ஏற்ற இடமில்லை. காரணம் பல இடையூறுகள் இருந்து கொண்டே வருகின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் பெண்ணை வீட்டுக்குள்ளே வைத்து அடைத்தும் விடுகின்றனர். இவ்வளவும் கண்டு பொறுக்க முடியாத பெண் தனது அன்பாளனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறாள். கடுமையான காடு வழியாக இருவரும் ஓடிவிட்டனர் என்ற செய்தி கிடைக்கிறது. இதைக் கேட்ட தாயின் மனது எப்படித் தாங்கும்? புலம்புகிறாள், அழுகிறாள். தாய் புலம்பிக்கொண்டிருப்பதைக் கண்ட பக்கத்து வீட்டார்கள். அழாதே! அழாதே! என்று ஆறுதல் கூறுகிறார்கள். ஆனால் பொறுக்க முடியாமல் ஆறுதல் கூறியவர்களைப் பார்த்துக் கீழ்வருமாறு புலம்பித் தீர்க்கிறாள் தாய்.
கவிதை வடிவம்
வெயில்! வெயில்! 
கடுமையான வெயில்!
மலையே பிளக்கும்படி
சூரியன் 
சுட்டெரித்துக் கொண்டிருக்கிறான்..
ஈந்து மரத்தில் 
சுகமாய் வாழ்ந்து வந்த
பறவையினங்கள் 
சுடு வெயிலால் சோர்வடைந்தன..
உளி போன்ற கற்கள்
உறுத்திக் கொண்டு நிற்கின்றன..
நடந்தால் கால்களைப் 
பதம் பார்த்துவிடும் 
கொடிய பாதை அது..
எப்போது என்ன நடக்கும் என்பது
யாருக்கும் தெரியாத மூங ;கில் காடு..
திடீரென தீப்பிடிக்கும் 
பாதகமும் உண்டு..
இந்த அடர்ந்;த காட்டில்
கருப்பு யானை போன்று 
வீரம் கொண்ட ஆண்மகனைப்
பற்றிக் கொண்டு சென்று விட்டாள் என் அன்பு மகள்..
அதற்காக நான் வருந்தவில்லை..
ஆனால்
என்னை 
நினைத்துப் பார்த்தாளா அவள்..?
எனக்கு ஆறுதலே 
அவள் ஒருத்தி தானே..?
உலையில் ஊதும்
ஊதுகுழாய் போல
மெலிந்து போகிறேன்..
என் கவலை அவளுக்கு
ஏன் புரியவில்லை..?
தீயில் வெந்து சாகின்றேன்..
உறக்கம் இன்றி உளறுகிறேன்..
இப்படி புலம்பவிட்டுச் சென்றுவிட்டாள்
என் அன்பு மகள்..
ஐயோ என்ன செய்வேன்..?
அன்றொரு நாள்
வெண்ணி என்னும் போர்க்களத்தில்
கரிகால் சோழனொடு போர் செய்து
வீழ்ந்தான் பெருஞ்சேரலாதன்..
எப்படித் தெரியுமா..?
நெஞ்சில் குத்திய அம்பு
புறமுதுகு வரை சென்று 
புண்ணாகிப்போனதால் 
வெக்கப்பட்டு வாளால் 
வடக்கிருந்து வீழ்ந்தான்..
துன்பம் தரக்கூடியது தான்
என்றாலும் 
பெருஞ்சேரலாதன் செயலில்
இன்பமும் இருந்தது..
செய்தி கேட்ட மக்களும்
மன்னன் வழியில் 
உயிர் துறந்தனர்…
ஆனால் 
என் மகள் என்னைப் பிரிந்தும்
எனது உடம்பில்
உயிர் ஒட்டிக்கொண்டு 
இருக்கிறதே
இந்த 
உயிரைத்தான் நான் வெறுக்கின்றேன்..
என் மகளை அல்ல..!
இந்த செய்தியைத் தருகின்ற பழம்பெரும் பாடலை எழுதியவர் மாமூலனார். இதோ அந்தப் பாடல்..

காய்ந்து செலற் கனலி கல்பகத் தெறுதலின்
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை
உளி முக வெம்பரல் அடி வருந்துறாலின்
விளி முறை அறியா வேய் கரி கானம்
வயக் களிற்று அன்ன காளையோடு என் மகள்
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனேஒழிந்து யாம்
ஊது உலைக்குருகின் உள்உயிர்த்து அசைஇ
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன் கனவ ஒண் படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன் 
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் 
அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்
காதல் வேண்டி எற் துறந்து
போதல் செல்லா  என் உயிரோடு புலந்தே
                 (அகநானூறு : 55)
உரைவடிவம்
மனிதர்களுக்குத் துன்பம் விளைவிக்கின்ற கொடுமையான காட்டின் வழியாக என் மகள் வீரன் ஒருவனுடன் சென்றுவிட்டாள். நான் இப்பொழுது புலம்புவது அவளின் பிரிவை நினைத்து அல்ல.
ஒருகாலத்தில் வெண்ணி என்கின்ற இடத்தில் கரிகால் வளவனோடு போர் செய்த பெருஞ்சேரலாதன் போரில் அம்பு பட்டு வீழ்ந்தான். வீரமரணமே அடைந்தாலும் அம்பு புறமுதுகில் பட்டதால் இழுக்கு என்று நினைத்து வடக்கிருந்து உயிர் துறந்தான். இந்தச் செய்தியைக் கேட்ட அவன் நாட்டு மக்கள் துன்பத்திலும் ஓர் இன்பச் செய்தியெனக் கருதித் தாங்களும் உயிர் துறந்தனர்.
 இவ்வளவு துன்பம் அடைந்தும் எனது உயிர் இன்னும் போகாமல் இருக்கிறதே. இதை நினைத்துத்தான் நான் அதிகம் வருந்துகின்றேன். என் மகளை நினைத்து அல்ல என்பது இதன் பொருள்.
பழந்தமிழ்ச்சொற்கள்
கனலி - சூரியன், தெறுதல் - சுடுதல், ஈந்து – பழங்காலத்து மரம், குருகு – கொக்கு போன்ற ஒரு பறவை, கனவ – வாய் புலம்புதல், பறந்தலை – போர்க்களம்
குறிப்பு
உயிரை விட, பெற்ற மகளை அதிகம் நேசித்த பெற்றோர் வாழ்ந்த பரம்பரை, நம் தமிழ்ப்பரம்பரை.

Share
Posted in: Posted on: சனி, 4 ஜூன், 2016

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.