ஞாயிறு, 14 ஜூன், 2015

புறம்போக்கு - 2015

Ulagasivan Sivan  /  at  ஜூன் 14, 2015  /  No comments

   புறம்போக்கு திரைவிமர்சனம்


    எஸ்.பி.ஜனநாதனின் அடுத்த கம்யூனிச படைப்புதான் புறம்போக்கு. இதற்கு முன். இயற்கை, ஈ, பேராண்மை என்று ஐந்நிலங்களை மையமிட்டு நகர்ந்த எஸ்.பி.ஜேயின் கதையம்சம் தற்போது நேரடியாக இந்திய அரசியலமைப்பைச் சற்று உரசிப்பார்த்துள்ளது. கம்யூனியச தோழர் பாலுவின் (ஆர்யா) தூக்குத்தண்டனையை மையமிட்டு நடத்துகின்ற பரபரப்பு மூமென்ட்தான் படம். இதனூடாக இந்திய அரசியல், போராளிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான கருத்து முரண்கள், சிறைவாசிகளின் நிராகரிக்கப்பட்ட உணர்வுகள், எமலிங்கத்தின் (விஜய் சேதுபதி) வழியாக மனித மென்மைகள், போராட்ட உணர்வுகள் என்று படம் முழுக்க பாடம் போதித்துச் செல்கிறார் இயக்குநர். உரிமைக்காகப் போராடிய பாலுவின் தூக்குத்தண்டனை நியாயமற்றது என்று அவரைத் தப்பிக்கச் செய்ய அவரது தோழர்கள் எடுக்கும் ஹைடெக் பிளான்களே (கிட்டத்தட்ட) திரைக்கதை. கம்யூனிச கொள்கைகளைப் பாலு மூலமாகவும் இந்திய அரசியல் சட்ட தர்க்கக் கேடுகளை மெக்காலே (சியாம்) மூலமாகவும் போராட்ட உணர்வுகளை குயிலி (கார்த்திகா) மூலமாகவும் சாமானியனின் உணர்வை எமலிங்கம் (விஜய் சேதுபதி) மூலமாகவும் போகிற போக்கில் யதார்த்தமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர். போர்க்கைதியாகக் கருதித் தன்னைத் தூக்கிலிட கேட்கும் போதும் தமிழ்மாறன் இறப்பின் இறுதிச் சடங்கில் பேசும் போதும் தூக்கு மேடையில் நிற்கும் போதும் ஆர்யாவின் முகபாவனை ஆசம். சிறையிலிருந்து தப்பித்துச் செல்லும் காட்சியில் ஆர்யா மெனக்கிட்டிருக்கிறார் தவிர வேறு சபாஸ் காட்சிகள் ஆர்யாவிற்கு இல்லை. விஜய் சேதுபதி தனது வழக்கமான (இயல்பான) நடிப்பினை அசால்டாக அசத்தியிருக்கிறார். இறுதிக்காட்சியில் கலங்கடித்து விடுகிறார். சியாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னைப் புதுப்பித்துக்கொண்டுள்ளார். உத்தரவை நிறைவேற்றும் கராரான ஆபிசராக அருமை. கூடவே கார்த்திகா பைக் ஓட்டி பெண் பேராளியாக (குயிலி எனும் பெண் தான் தமிழகத்தின் முதல் பெண் போராளி சிவகங்கை மாவட்டம்) பட்டாசு கிளப்புகிறார். இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் சமமான ரோல்களைக் கொடுத்து போர்க்கொடி தூக்கியிருக்கிறார் இயக்குநர்.  நான் பார்த்த தியேட்டர் மொக்கையாதலால் பின்னணி இசையை ரசிக்க இயலவில்லை. ரசிக்கும்படி இல்லையென்று கூட சொல்லலாம். ஒரே இரைச்சல். ஒளிப்பதிவின் நேர்த்தி பாராட்டத்தக்கது. பொதுவுடைமைதான் தீர்வு என்று காலங்காலமாகத்தான் சொல்லி வருகின்றோம் ஆனால் எப்படி அதைச் சாத்தியமாக்குவது என்பதில் தான் தோழர்களுக்கே குழப்பம். அதிலும் தமிழ்நாட்டு அரசியலில் சாத்தியமே இல்லை. ஆனாலும் போராட்டமே தீர்வு என்பதை மறுபடி மறுபடி எஸ்.பி.ஜே. யின் கேமரா உணர்த்திச் செல்கிறது. உலக உழைப்பாளிகள் ஒன்று கூடியே ஆக வேண்டும். முதலாளித்துவ முதலைகளை சிறு மீன்கள் விழுங்க வேண்டுமல்லவா அதற்காக ஒன்று கூடியாக வேண்டும் என்பதைப் புத்தியில் படும் அளவிற்குச் சொல்லியிருக்கிறார். தூக்கிலிருந்து தப்பிக்கச் செய்வதையே சவ்வாக இழுத்திருக்க வேண்டுமா..? உணவுப்பொருள் தேக்கம், ஆயுதக் கிடங்கு என்று வழக்கமான கம்யூனிச சாடல்களைத் தவிர்த்து தற்போதைய மிக முக்கிய பிரச்சனைகளைப் பேசியிருக்கலாம். இருந்தாலும் படம் முடிந்து எல்லோரும் மன இறுக்கத்தோடு போன போது ஏதோ சிறு உணர்வை புறம்போக்கு யூனிட் மேம்போக்காகச் சொல்லி போராட்டத்தை ஜூஸ் குடித்து முடித்துக் கொண்டுள்ளது எனலாம். அடுத்தப் படைப்பிற்குக் காத்திருக்கிறேன் எஸ்.பி.ஜே.

                                                                           ம.லோகேஸ்வரன்

Share
Posted in: Posted on: ஞாயிறு, 14 ஜூன், 2015

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.