முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செங்கழனிக் கோழி

ஆசையாய் வளர்த்த பெட்டைக்கோழி திடீர் விருந்தால் மயிர்பறித்து மசாலாவானது வாசனை மூக்கைத் துளைத்தாலும் கொதிப்புச் சததம் நெஞ்சை வெடிக்கச் செய்தது சோற்றில் கிடந்த ஈரல் இதயத்தைக் கனக்கச் செய்தது தட்டின் ஓரத்தில் கிடந்த கழுத்துப்பகுதி எனது குரல்வளையை நெருக்கியது சதைக்கறி அத்தனையும் எனது தசைநார்களைக் கிழித்துக் கொண்டிருந்தன வந்த விருந்தினன் கைகழுவி வாய்துடைத்தார் நான் இன்னும் சோற்றின் இடுக்குகளில் என் கோழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்

இளங்கன்று

  இளங்கன்று அந்தக் கன்றுக்குட்டி நிச்சயமாக நடிக்கவில்லை வெறுந்தரையை உற்றுநோக்குகிறது.. சுரக்காத காம்பினை முட்டிக் கொள்கிறது பசுவின் சிறுநீரில் நனைந்து கொள்கிறது சானமிட்டதும் வெறித்துப் பார்க்கிறது வைக்கோலைத் தானும் சாப்பிடுவதுபோல் பாசாங்கு காட்டுகிறது துள்ளிக் குதித்துப் பிறகு திரும்பி விடுகிறது பசுக்கயிற்றை அவிழ்க்க வரும் கிழவியைக் கெட்ட வார்த்தை பேசவைக்கிறது பசுவுடன் நடந்து சென்று வெறித்துப்போய் வீடு வருகிறது வாய்க்கூடு போட்டாலும் நாய்ப்பீயை மோந்து பார்க்கிறது வாலை ஆட்டியாட்டிக் கிண்டல் புரிகிறது கழுவ வைத்திருந்த பாத்திரங்களை உருட்டிச் செல்கிறது நிச்சயமாக அது நடிக்கவில்லை திண்ணையில் உட்கார்ந்திருக்கும் எனக்கும் தொழுவத்தில் நின்றுகொண்டிருக்கும் பசுவிற்கும் ஏதோ சொல்ல ஆசைப்படுகிறது அதுவரை நாங்கள் அசைபோட்டுக் கொண்டிருக்கிறோம்..

நானே பைத்தியம்,

முழுமனதாய் ஒப்புக்கொள்கிறேன் நான் கண்டிப்பாகப் பைத்தியம் தான்.. எப்படி சிந்தித்தாலும் நான் பைத்தியம் என்பதைவிட்டு   என்னால் மீள முடியவில்லை.. நிச்சயம் கனவல்ல பைத்தியத்திற்கான சாத்தியக்கூறுகள் என் கண்முன்னே நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.. நடைபாதையில் கழிப்பறையில் பேருந்து பயணத்தில் மொட்டை மாடியில் கல்லூரி வளாகத்தில் சந்தையில் தியேட்டரில் மருத்துவமனையில் தியானக் கூடத்தில் எனக்கான அடையாளங்களை தொலைத்துவிட்டு எப்படி எப்படியோ திரிந்து கொண்டிருக்கிறேன் நிச்சயம் இது நானல்ல நானாகிப் போன நான்.. அவனைப் போல் ஆக வேண்டும் என்கிற என்னை முதலில் கொல்ல வேண்டும்.. அப்படியே என்னைப் போல் உருவாக்கத் துடிக்கும் எண்ணத்தையும்..

கொடூர வாழ்க்கை

           கொடூர வாழ்க்கை  கால் தவறி விழுந்தேன்  அம்மா என்று அழைக்க விடாமல்  தடுக்கிறது  பாலாய்ப் போன இந்த அரசியல்...  அடிபட்டுக் கிடக்கிறான்   உதவ முடியாமல் செய்கிறது  வெக்கங்கெட்ட இந்த சட்டம்...  கை இல்லாமல்  கை ஏந்துகிறான் காணாமல்  போகச்  சொல்கிறது  பொருளாதார நெருக்கடி... தெரியாமல் கை பட்டதற்கு  கேவலமாக திட்டுகிறான்  எதற்கு பிரச்சனை போ  என்கிறது மனசு... என்ன செய்வது? இதுபோல் கண்டும் காணாமலும்  சென்றால் தான்  குடும்பம் குடும்பமாக இருக்கிறது..!

சாயம் போன வீடு

சாயம் போன வீடு அ ந்த மஞ்சள் கலர் வீடு சாம்பல் நிறமாகச் சாயம்போயிருந்தது வெயிலுக்கு மனிதர்கள் கறுத்துப் போவார்களே அதைப்போல.. கரகரத்தக் குரலில் புறாக்கள் முணங்கிக்கொண்டிருந்தன.. வீட்டைச் சுற்றிலும் காய்ந்து கறுகிப்போன செடிகள்.. மொட்டைமாடியில் இடுப்பொடிந்த ஆண்டனா ஒன்று.. நூற்றுக்கணக்கான வௌவால்கள் எதனையோ கேட்டபடித் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தன.. தேனீக்கள் இல்லாத வெறும் தேன்கூடு மட்டும் வீட்டின் நிலைக்கதவு ஓரமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது.. வேறு எங்கோ புலம்பெயர்ந்துவிட்டன இந்த வீட்டு ஆட்களைப் போல தேனீக்களும்.. நிச்சயமாக வீட்டில் யாருமே இல்லை.. அதற்காக அது பேய்வீடும் இல்லை.. ஒரேயொரு பிச்சசைக்காரன் தினசரி தனது வசூலைச் சரிபார்த்துச் செல்கின்றான்.. அன்பு இல்லம் என்பது அவ்வீட்டின் பெயர்.. ஏழு குடும்பம் ஒன்றாக வாழ்ந்த சந்தோச வீடாம் இது என் அபத்தா சொல்லக் கேள்வி... என் வீட்டின் எதிர்ப்புறமாக அந்த வீடு இன்னும் சாயம் போய்க்கொண்டேயிருக்கிறது.. பெருமூச்செறிந்து கடந்துகொண்டிருக்கிறேன் வீடுகள் சாயம் போவது  விருப்பு வெறுப்புகளைச் சகிக்க முடியாத இருப்பின் கழிவுக்காட்சி..!